Last Updated : 04 Apr, 2021 03:15 AM

 

Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கை குறிவைக்கும் சென்னைப் பெண்

இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத விளையாட்டு பாய்மர படகுப் போட்டி. இந்த விளையாட்டில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன். 23 வயது வீராங்கனையான நேத்ரா குமணன் 2019-ம் ஆண்டு, மியாமியில் நடந்த ஹெம்பல் வேர்ல்ட் கப் சீரிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நேத்ராவின் தந்தை குமணன், சொந்தமாக ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மகளுக்கு படகுப் போட்டியில் ஆர்வம் இருப்பது தெரிந்ததும், அவர் அதில் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதுபற்றி கூறும் நேத்ரா, “என் முயற்சிகளுக்கு துணையாக என் பெற்றோர் பாறைபோல் உறுதியாக இருக்கிறார்கள். என் பயிற்சிக்கு நிறைய செலவானாலும், அவர்கள் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்” என்றார்.

2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்ற நேத்ராவின் ஒரே லட்சியம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான். இதற்காக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற கடுமையாக உழைத்து வருகிறார் நேத்ரா. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஓமன் நாட்டில் நடக்கவுள்ள முசானா ஓபன் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு தகுதிபெற முடியும் என்பதால் அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

“பாய்மரப் போட்டிகளில் பங்கேற்க உடல் வலிமை மட்டுமின்றி, மன வலிமையும் மிகவும் முக்கியம். அதுதான் நமது வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று கூறும் நேத்ரா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று, இந்தியாவுக்கு பதக்கத்துடன் திரும்ப வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x