

தென் ஆப்பிரிக்கா-வாரிய தலைவர் அணிகளுக்கிடையேயான 2 நாள் பயிற்சி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. வாரிய தலைவர் அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல் 72, நமன் ஓஜா 52, கருண் நாயர் 44, ஹார்டிக் பாண்டியா 47 ரன் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது. வான் சைல் 18, ஹார்மர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 69.2 ஓவரில் 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டி வில்லியர்ஸ் 131 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 112 ரன் விளாசினார். டேன் விலாஸ் 54, ஸ்டெயின் 37, எல்கார் 23 ரன் எடுத்தனர். வாரிய தலைவர் அணி தரப்பில் ஷ்ரதுல் தாக்குர் 4, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய வாரிய தலைவர் அணி 30 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.