Last Updated : 03 Apr, 2021 03:13 AM

 

Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஈட்டியின் பயணம்

நம் முன்னோர்கள், வேட்டையாடுவதற்காக முதலில் பயன்படுத்திய ஆயுதம் ஈட்டியாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அதை வைத்து நிச்சயம் தங்களுக்குள் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஈட்டி எறியும் போட்டி எப்போது தோன்றியது என்பதற்கான குறிப்புகள் ஏதும் வரலாற்றில் இல்லை. ஆனால் கிமு 708-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பென்டத்லான் போட்டியின் ஒரு அங்கமாக ஈட்டி எறியும் போட்டி இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து ஆதிகாலத்து விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறியும் போட்டியும் ஒன்று என்பது நிரூபணமாகி உள்ளது. நவீன ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பிரிவில் 1908-ம் ஆண்டிலும், பெண்கள் பிரிவில் 1932-ம் ஆண்டிலும் ஈட்டி எறியும் போட்டிகள் அறிமுகமாகி உள்ளன.

ஈட்டி எறியும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், 2.6 முதல் 2.7 மீட்டர் நீளமும், 800 கிராம் எடையும் கொண்ட ஈட்டியைத் துக்கிக்கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து, குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஓங்கி வீசவேண்டும். அப்படி வீசி முடித்தவுடன் திரும்பாமல் நேராக நிற்க வேண்டும். குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டிச் சென்றும் ஈட்டியை வீசக்கூடாது. வீசப்படும் ஈட்டியின் முனை எந்த இடத்தில் முதலில் படுகிறதோ அந்த இடத்தை வைத்துதான் ஈட்டி வீசப்பட்ட தூரம் அளக்கப்படும். அதிக தூரத்துக்கு ஈட்டியை எறியும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

போட்டியின்போது ஒவ்வொரு வீரருக்கும் 4 முதல் 6 வாய்ப்புகள் வழங்கப்படும். இதேபோல் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் 2.2 முதல் 2.3 மீட்டர் நீளமும் 600 கிராம் எடையும் கொண்ட ஈட்டிகளைப் போட்டியில் பயன்படுத்த வேண்டும். ஈட்டி எறியும் போட்டியைப் பொறுத்தவரை ஐரோப்பிய வீரர்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x