மறக்க முடியுமா இந்த நாளை? இந்திய அணியின் 2-வது உலகக் கோப்பை வென்ற தினம்: பிடித்தமான இன்னிங்ஸ் குறித்து மனம் திறந்த தோனி

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில்  தோனி வின்னிங் ஷாட் அடித்த காட்சி: கோப்புப் படம்.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தோனி வின்னிங் ஷாட் அடித்த காட்சி: கோப்புப் படம்.
Updated on
2 min read

முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 10-வது ஆண்டு நிறைவடைகிறது. தனக்குப் பிடித்த இன்னிங்ஸ் குறித்து தோனி மனம் திறந்துள்ளார்.

1984-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அதற்குப் பின் கோப்பையை வெல்வதற்கு நீண்ட ஆண்டுகள் ஆயின. 2011-ம் ஆண்டு தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 2-வது முறையாக அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியது.

மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் 275 ரன்கள் எனும் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை துரத்திய இந்திய அணி, 49 ஓவர்களில் அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கேப்டன் தோனி 5-வது வீரராகக் களமிறங்கி 79 பந்துகளில் 91 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதிலும் கடைசியில் வின்னிங் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியோடு தோனி முடித்து வைத்தார்.

இந்நிலையில் கல்ஃப் ஆயில் லூப்ரிகேன்ஸ் நிறுவனம் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 10-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தோனியை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது

அதாவது 2005-ம் ஆண்டு இளம் வயது தோனியும், சமீபத்திய தோனியைப் பேட்டி எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் தோனி மனம் திறந்து சில விஷயங்களைப் பேசியுள்ளார்.

ஒவ்வொருபோட்டிக்கும் ஒரு வீரர் எவ்வாறு அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்வது?

உங்கள் மனநிலைதான் உங்கள் பங்களிப்புக்கும், அணியின் வெற்றிக்கும் காரணம். எதிரணிக்கு எதிராக எவ்வாறு நீங்கள் தயாராகிறீர்கள், திட்டமிடுகிறீர்கள், அனைத்துப் போட்டிகளிலும் எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள் என்பதில் இருக்கிறது.

ஒரு பேட்ஸ்மேன் எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமான சூழல் இருக்கும். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் ஆகியவை வித்தியாசமானவை. அதற்கு வலிமையான மனநிலை தேவை.

அதற்குத் தொடர்ந்து நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இன்று 3-வது வரிசையில் பேட் செய்வோம், நாளை நடுவரிசையில் பேட் செய்ய வேண்டிய தேவை இருக்கும். ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு விதமான தேவை இருக்கும். அதற்கு ஏற்ப விளையாட வேண்டும். மனரீதியாக அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.

சார், நீங்கள் ஏராளமான ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறீர்கள். இதில் உங்களுக்குப் பிடித்தமான இன்னிங்ஸ் எது என்று நான் கேட்டால், எது உங்களுடைய சிறந்த இன்னிங்ஸாக இருக்கும்?

எனக்குப் பிடித்த இன்னிங்ஸ் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்னிங்ஸ்தான் எனக்குப் பிடித்தமானது. ஆட்டத்தை சிக்ஸர் அடித்து முடித்து வைத்த அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது.


அதிலும் நான் இளம் வயதில் அறிமுகமான ஆண்டே ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் வென்றதை மறக்க முடியாது. இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் சேர்த்தது. 50 ஓவர்கள் போட்டியில் 46 ஓவர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்து, மீண்டும் 50 ஓவர்கள் கீப்பிங் செய்வது சாதாரண விஷயமல்ல.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in