

டி 20 உலககோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா என்பதற்கு பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அளித்தார். சென்னையை நாங்கள் நிராகரிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
6 வது டி 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 இடங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
ஆனால் போட்டி நடைபெறும் இடங்களை 5 ஆக குறைக்குமாறு ஐசிசி வலியுறுத்தியது. இந்த நிலையில் டி 20 உலககோப்பை தொடரின் அமைப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு மற்றும் போட்டி அமைப்பு குழு இணைந்து இந்த கூட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டம் முடிவடைந்ததும் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறும்போது, "டி 20 உலக கோப்பைக்கான போட்டியை நடத்துவதில் இருந்து சென்னையை நாங்கள் நிராகரிக்கவில்லை. இலங்கை அணி அங்கு சென்று விளையாடுவது, மைதான கேலரிகள் உள்ளிட்ட சில பிரச்சினைகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளது.
எல்லாவற்றையும் ஆலோசித்து தான் எந்த மைதானத்துக்கு எத்தனை போட்டிகள் என்று ஒதுக்க முடியும். தற்போதைய சூழ்நிலையில் எந்த புதிய முடிவும் எடுக்கப்படவில்லை. போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள இடங்கள், அட்டவணை தயாரித்து ஐசிசிக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் போட்டி அட்டவணை வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
பிரச்சினை என்ன?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 கேலரிகளுக்கு இதுவரை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் சுமார் 2 ஆண்டுகளாகியும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எந்தவிதமான சுமூகமான முடிவையும் பிசிசிஐ தெரிவித்த காலகெடுவுக்குள் தெரிவிக்கவில்லை.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கேளிக்கை வரி பாக்கி மற்றும் ஊழல் பிரச்சினையும் இருக்கிறது. இதனால் இந்த 2 இடங்களிலும் டி 20 உலககோப்பை நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.