Last Updated : 31 Mar, 2021 03:15 AM

 

Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் செஸ் ராணி

இந்திய செஸ் உலகில் ராணியாக வலம்வரும் கொனேரு ஹம்பியின் பிறந்தநாள் இன்று.

1987-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிவாடா என்ற ஊரில் கொனேரு ஹம்பி பிறந்தார். ‘ஹம்பி’ என்ற வார்த்தைக்கு ‘வெற்றி’ என்று அர்த்தம். அதனால் அப்பெயரையே தனது மகளுக்கு சூட்டினார் கொனேரு ஹம்பியின் அப்பா கொனேரு அசோக்.

முன்னாள் செஸ் வீரரான அசோக், தன்னைப் போலவே தனது மகளும் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 5 வயதிலேயே ஹம்பியை செஸ் பயிற்சிக்கு அனுப்பினார். செஸ் விளையாட்டில் புகழ்பெற்ற வீராங்கனைகளாக இருந்த பலரது வாழ்க்கைக் கதைகளையும் சொல்லி உற்சாகமூட்டினார். ஒருபுறம் பயிற்சி, மறுபுறம் அப்பா கொடுக்கும் உற்சாகம் ஆகியவை கொனேரு ஹம்பியின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. ஒரு கட்டத்தில் தனது மகளின் முன்னேற்றத்துக்கு துணைபுரிவதற்காக, பல்கலைக்கழகத்தில் தான் பார்த்துவந்த வேலையை உதறி, போட்டிக்காக மகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் துணையாகச் சென்றார்.

அப்பாவின் உழைப்புக்கு சற்றும் குறையாமல் போராடிய கொனேரு ஹம்பி, 10, 12, 14 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டிகளில் பட்டம் வென்றார். தனது 14 வயதிலேயே செஸ் வீராங்கனைகள் பட்டியலில் 3-வது இடம்பிடித்த கொனேரு ஹம்பி, 2,539 புள்ளிகளை ஈட்டினார். 1997-ல் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற ஹம்பி, தனது 15-வது வயதிலேயே ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அவர், இன்னும் இந்தியாவின் முன்னணி செஸ் வீராங்கனையாக உள்ளார். தனது சாதனைகளுக்காக, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான பிபிசி விருதையும் அவர் வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x