Published : 22 Jun 2014 01:44 PM
Last Updated : 22 Jun 2014 01:44 PM

மீண்டும் மெஸ்ஸி மேஜிக்: ஈரானை வீழ்த்தப் போராடிய அர்ஜென்டீனா!

ஈரான் அணியை கடைசி நிமிட கோலினால் வீழ்த்தி, அர்ஜென்டீனா அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீண்டும் லயோனல் மெஸ்ஸியின் மேஜிக் கோல்தான் அர்ஜென்டீனாவை டிரா என்ற சங்கடத்திலிருந்து காப்பாற்றியது.

இடைவேளைக்குப் பிறகு ஈரானின் 3 கோல் முயற்சிகளை அர்ஜென்டீனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ தடுத்தார். இல்லையெனில் மெஸ்ஸி மேஜிக் என்று பேச இடமில்லாது போயிருக்கும்.

ஆனால், இந்த வெற்றியை ஈட்டப் படாத பாடுபட்டது உலகப் புகழ் பெற்ற மெஸ்ஸியை தன் வசம் வைத்திருக்கும் அர்ஜென்டீனா. ஈரான் தன் பங்கிற்கு தைரியமாக ஆடியது அவ்வளவே. ஆனால் 'கோல் போட முடியாது உங்களால்' என்று அர்ஜென்டீனாவிடம் சவால் விடுத்தது போல் இருந்தது அதன் தடுப்பு உத்தி.

மெஸ்ஸியை பெரும்பகுதி ஈரான் சாந்தமாக வைத்திருந்தது. அவருக்கென்று பிரத்யேகமாக வீரர்களை நியமித்தது ஈரான், அதனால் அவர் கடைசி நிமிடம் அந்த கோல் அடிக்கும் வரை சாதுவாகவே காணப்பட்டார்.

ஆனாலும் எப்படித் தடுப்பு உத்தி செய்தாலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டீனா இவ்வளவு போராடும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் ஒரு சமயத்தில் அர்ஜென்டீன வீரர் பேபியோ சபலேட்டா ஈரான் வீரர் அஸ்கான் தேஜகாவை பெனால்டி பகுதிக்குள் பவுல் செய்ததாக பெனால்டி கொடுக்க ஈரான் தரப்பிலிருந்து பெரும் முறையீடு எழுந்தது. நடுவர் ஏன் அதனை ஏற்கவில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்று.

முதல் பாதியில் அர்ஜென்டீனாவிடமே பந்து அதிகம் இருந்தது. ஆனாலும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அரணை உடைக்க முடியவில்லை. முதல் கோல் வாய்ப்பு அர்ஜென்டீன வீரர் ஹிகுவேயிற்கு வந்தது. பெர்னாண்டோ காகோ அளித்த பாஸை கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் ஈரான் கோல் கீப்பர் மிக தைரியமாக ஹிகுவே காலடியில் பந்தை பிடித்தார்.

அதன் பிறகு மெஸ்ஸி மற்றும் ஏஞ்சல் டி மரியா இருவரும் இரண்டு ஃப்ரீ கிக் வாய்ப்புகளை ஈரான் கோல் போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தனர். பிறகு மெஸ்ஸி அதிசயமாக சில பாஸ்களை செய்தப் போதிலும் அர்ஜென்டீனா கோல் வாய்ப்பு கை கூடவில்லை.

மாறாக இடைவேளைக்கு சற்று முன் ஈரான் ஸ்ட்ரைக்கர் ஜலால் ஹொசைனி ஏறக்குறைய கோலை அடித்திருப்பார். அது ஈரானின் வலியை அதிகரிக்கும் விதமாக கோல் போஸ்டிற்கு மேலே சென்றது.

அதன் பிறகு ஈரான் வீரர் ரேசா தலையால் ஒரு பந்தை கோலை நோக்கி அடிக்க அர்ஜெடீன கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். இதற்கு அடுத்த படியாக பெனால்டி முறையீடு எழுந்தது. ஆனால் நடுவர் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு புகழ்பெற்ற டிரா நோக்கி ஆட்டம் சென்றது. குறித்த 90 நிமிட ஆட்டம் முடிவடைய காயத்திஆல் நிறுத்தப்பட்ட ஆட்ட நேரத்தை ஈடுகட்டும் நேரத்தில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்ந்தது.

வலது புறம் ஒரு பாஸை வாங்கிய மெஸ்ஸி சில பல உத்திகளைக் கையாண்டு பந்தை தான் அடிக்க முடியக்கூடிய இடைவெளி கிடைக்குமாறு செய்து கடைசியில் இடது காலால் ஒரே உதை உதைக்க பந்து ஈரான் கோலுக்குள் சீறிப்பாய்ந்தது. உண்மையில் அபாரமான கோல் இது. அவரது இத்தகைய கோல்களை நிறைய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் வெகு அரிதாகவே சர்வதேச ஆட்டங்களில் இத்தகைய கோலை அவர் அடிப்பது வழக்கம்.

மெஸ்ஸி 2வது கோலை இந்த உலகக் கோப்பையில் அடித்துள்ளார். இரண்டுமே வெற்றி கோல்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x