Published : 29 Mar 2021 07:22 PM
Last Updated : 29 Mar 2021 07:22 PM

டெல்லி கேபிடல்ஸ் தயார்; கேப்டன் யாரு? அஸ்வின், ரிஷப் பந்த், அக்ஸர் படேல், பாண்டிங் மும்பை வந்தனர்

ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல் மும்பை ஹோட்டலுக்கு வந்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

மும்பை

2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், வீரர்கள் அஸ்வின், ரிஷப் பந்த், அக்ஸர் படேல் ஆகியோர் மும்பை வந்து சேர்ந்தனர்.

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால், யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி அணியில் கேப்டன் பதவிக்கு அஸ்வின், ரிஷப் பந்த், ரஹானே ஆகியோரின் பெயர்கள் அடிபடும் நிலையில், இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியவில்லை. இதுவரை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் கேப்டன் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.

ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டாலும் அனுபவமின்மை மிகப்பெரிய குறையாக இருக்கிறது. அணியை இக்கட்டான நேரத்தில் வழிநடத்துவது, அழுத்தத்தைத் தாங்குவது, பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்துவது எனப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யும்போது ரிஷப் பந்த் தேர்வுக்கு வாய்ப்பு குறைவு. அஸ்வின், ரஹானே இருவரில் ஒருவருக்கு கேப்டன் வாய்ப்பு கிடைக்கலாம்.

ரிக்கி பாண்டிங் மும்பை வந்த காட்சி

டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோரும் மும்பையில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோட்டலுக்கு வந்துவிட்டனர்.

வீரர்கள் அனைவரும் ஒரு வாரம் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, 3 கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் நெகட்டிவ் வந்தபின்புதான் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பப்படுவார்கள்.

கடந்த ஆண்டு 2-ம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x