Last Updated : 29 Mar, 2021 03:15 AM

 

Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஆலன் பார்டரின் கோபம்

இந்திய கிரிக்கெட் உலகில் சுனில் கவாஸ்கர் எப்படி முக்கிய இடத்தை வகிக்கிறாரோ, அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் முக்கிய இடம் வகிக்கும் பேட்ஸ்மேன் ஆலன் பார்டர். கவாஸ்கருக்கு அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்த ஆலன் பார்டர், 1987-ல் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்து, தனது அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.

1955-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நகரில் பிறந்த ஆலன் பார்டர், 156 டெஸ்ட் போட்டிகளில் 11,174 ரன்களைக் குவித்ததுடன் 39 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 273 ஒருநாள் போட்டிகளில் 6,524 ரன்களைக் குவித்து 73 விக்கெட்களை எடுத்துள்ளார்.

1979-80-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 4 ரன்களில் அவுட் ஆகியுள்ளார் பார்டர். அவரால் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெவிலியன் திரும்பியவர் தலையைக் குனிந்தவாறே டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்று பேட்டையும் கிளவுஸ்களையும் கழற்றி வீசியுள்ளார். இங்கிலாந்து அணி வீரர்களை சத்தமாக திட்டியவாறே தனது கால் காப்புகளையும் கழற்றி வீசியவர், பின்னர் அவற்றை வைப்பதற்காக டிரஸ்ஸிங் ரூமில் இருந்த தனது பையைத் தேடியுள்ளார். அப்போதுதான் தான் ஏதோ ஞாபகத்தில் இங்கிலாந்து அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்குள் தவறுதலாக நுழைந்தது அவருக்கு தெரிந்தது.

இங்கிலாந்து வீரர்களை அவர் திட்டியபோது அந்த அறைக்குள் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த சிலரும் இருந்துள்ளனர். கோபத்தில், தான் டிரஸ்ஸிங் ரூம் மாறி வந்ததுடன் இங்கிலாந்து வீரர்களை அவர்கள் முன்பே திட்டியதற்காக வெட்கப்பட்டார். இருப்பினும் அதே போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களைச் சேர்த்தார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி, தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x