

1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்ஸிகோவில் மே 31 முதல் ஜூன் 28 வரை நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.
இதையடுத்து மெக்ஸிகோவில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் இரு உலகக் கோப்பையை நடத்திய முதல் நாடு என்ற பெருமை மெக்ஸிகோ வசமானது.
ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஆர்ஜென்டீனா சாம்பியன்
அரையிறுதியில் ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், மேற்கு ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முதல் பாதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜோஸ் பிரௌன் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜார்ஜ் வல்டானோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையை எட்டியது. 73-வது நிமிடம் வரை இதே நிலை நீடிக்க, 74-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி எழுச்சி பெற்றது. மேற்கு ஜெர்மனியின் கார்ல் ஹெய்ன்ஸ் முதல் கோலை அடிக்க, 80-வது நிமிடத்தில் ரூடி வாலர் அடுத்த கோலை அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.
இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன் ஆனது.
உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, 5 அழகான கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த மரடோனா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன.
மரடோனாவின் மாயாஜாலம்
இந்த உலகக் கோப்பையின் காலிறுதியில் இங்கிலாந்தும், ஆர்ஜென்டீனாவும் மோதின. அதில் ஆர்ஜென்டீன கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அவர் தலையால் பந்தை முட்டியபோது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.
இதே ஆட்டத்தில் மரடோனா மற்றொரு கோலும் அடித்தார். அப்போது இங்கிலாந்தின் 5 வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்தை எடுத்துச் சென்ற மரடோனா, கடைசியாக கோல் கீப்பரையும் வீழ்த்தி கோலடித்தார். இந்த கோல், பின்னாளில் நூற்றாண்டின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.
1986 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 132
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,407,431
ஓர் ஆட்டத்தில் அதிக கோல், புட்ராகினோ (ஸ்பெயின்) - 4 கோல்கள்
கோலடிக்கப்படாத ஆட்டம் - 4
டிராவான ஆட்டம் - 14
டாப் ஸ்கோர்
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 6 கோல்
டீகோ மரடோனா (ஆர்ஜென்டீனா) - 5 கோல்
எமிலியோ புட்ராகினோ (ஸ்பெயின்) - 5 கோல்
கரேகா (பிரேசில்) - 5 கோல்
ரெட் கார்டு - 8
யெல்லோ கார்டு - 137