

டி20 போட்டியில் மோசமாகச் செயல்பட்டதற்காக தன்னை விமர்சித்தவர்களுக்கு சதம் அடித்து சைகை மூலம் இந்தியஅணி வீரர் கே.எல்.ராகுல் பதில் அளித்துள்ளார்.
புனேயில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் ராகுல் அடித்த 5-வது சதமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தொடர்ந்து 4 ஆட்டங்களிலும் மோசமாக பேட் செய்த ராகுல் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், ராகுல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கோலி வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை கடந்த முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்து நிரூபித்த ராகுல், இந்த ஆட்டத்தில் சதம் அடித்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதில்அளித்தார்.
தன்மீது தேவையில்லாத விமர்சனங்கள் முன்வைப்போரின் கருத்துக்களை காதில் வாங்க மாட்டேன், அவர்களின் பேச்சுக்கு இந்த சதத்தில் பதில்அளித்தேன் என சைகையில் இரு காதுகளையும் மூடி பதில் அளித்தார்
இதுகுறித்து கே.எல்.ராகுல் கூறுகையில் " நான் டி20 தொடரில் மோசமாக விளையாடியபோது என்னை வீழ்த்துவதற்கு பலரும் முயன்றார்கள், அந்த நேரத்தில் நான் அவர்களையும், அவர்களின் பேச்சையும் நிராகரிப்பது அவசியம்.அவர்களின் வாயை மூடுவதற்கான செய்தியாகவே இந்த சதம் அமைந்திருக்கிறது.
டி20 போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு அதிருப்தியாக இருந்தது. ஆனால், சில தரமான ஷாட்களை அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியது நம்பிக்கையை ஏற்படுத்தி, என் பதற்றத்தை போக்கியது. கோலியுடனும், ரிஷப் பந்த்துடனும் நான் பாட்னர்ஷிப் அமைத்து இன்று விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நானும், விராட் கோலியும் பேட்டிங் செய்தபோது, 300 ரன்களுக்கு மேல் அணியைக் கொண்டு செல்ல தீர்மானித்தோம். ஆதலால் இப்போது அணியின் ஸ்கோர் 336 ரன்கள் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வெயில் கடுமையாக இருந்தது, இருந்தபோதிலும் நாங்கள் பாட்னர்ஷிப் அமைத்தோம். 50 ஓவர்களில் நல்ல ஸ்கோரை எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதிகமான ரன்கள் அடிக்கும் போது நம்பிக்கை பிறக்கும், அதுதான் நமக்குத் தேவை" எனத் தெரிவித்தார்.