

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டியில் இன்னும் 41 ரன்கள் சேர்த்தால், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சாதனையைத் தகரத்துவிடுவார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தின்போது, விராட் கோலி, அனைத்துவிதமான போட்டிகளிலும் உள்நாட்டளவில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை கோலி எட்டினார்.
புனேவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் 2-வது ஆட்டத்தில் கோலி 41 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டியில் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தலாம்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 5,414 ரன்கள் குவித்துள்ளார். தற்போது விராட் கோலி 93 ஒருநாள் போட்டிகளில் 5,376 ரன்கள் குவித்துள்ளார். ஸ்மித்தின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 41 ரன்கள் மட்டும் தேவை. 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் கோலி அந்தச் சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலி 41 ரன்கள் சேர்த்தால், கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பெறுவார். முதலிடத்தில் ஆஸி.முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 234 போட்டிகளில் 8,497 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் தோனி 200 போட்டிகளில் 6,641 ரன்களுடன் உள்ளார். 3-வது இடத்தில் நியூஸி.முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங், 4-வது இடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா ஆகியோர் உள்ளனர்.
கடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் விராட் கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் உள்நாட்டளவில் ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது பேட்ஸ்மேன் எனும் பெருமையை கோலி பெற்றார். முதலிடத்தில் சச்சின் (6,976), 2-வது இடத்தில் ரிக்கி பாண்டிங் (5,406), 3-வது இடத்தில் ஜேக்ஸ் காலிஸ் (5,178) ஆகியோர் உள்ளனர்.