

பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, நிறைய தியாகங்களை செய்தது உள்ளிட்டவற்றால்தான் இப்போது சாதிக்க முடிந்துள்ளது என்று சானியா மிர்சா கூறினார்.
மேலும், இந்த ஆண்டில் சாதித்ததைவிட வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக விளையாடி சாதிப்பது கடினமானதாகும். எனினும் 2015 சீசனுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா, 2015 சீசனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து 2 கிராண்ட்ஸ்லாம் உட்பட 10 கோப்பைகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டில் சாதித்ததைவிட வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக விளையாடி சாதிப்பது கடினமானதாகும் என சானியா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "2015 சீசனைவிட இன்னொரு சீசன் சிறப்பானதாக அமைவது கடினமானது. அடுத்த சீசனில் நாங்கள் இருவரும் இணைந்து விளையாடுவது எங்கள் கையில் இல்லை. அப்படி இணைந்து விளையாடி இன்னொரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் அது சிறப்பானதாக அமையும்.
இந்த ஆண்டில் நாங்கள் இருவரும் இணைந்து இரு கிராண்ட்ஸ்லாம் உள்பட 10 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது மிகப்பெரிய விஷயம். இந்த சீசன்தான் எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதி.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடி வந்தாலும், இந்த ஆண்டில்தான் எங்களால் களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, நிறைய தியாகங்களை செய்தது உள்ளிட்டவற்றால்தான் இப்போது சாதிக்க முடிந்துள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம் என்ற உத்தரவாதத்தை தர முடியாது. ஆனால் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடி பதக்கம் வெல்ல முயற்சிப்போம். பதக்கம் வெல்ல முடியாமல் போனால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அதேநேரத்தில் பதக்கம் வெல்லும்பட்சத்தில் கனவு நனவாகிவிடும்" என்றார் சானியா மிர்சா.