

ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்.
நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ்.
ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற்றி தொடர்ச்சியாக இயன் சாப்பல் கேள்விகளை எழுப்பி வந்தார்.
ஷான் மார்ஷ் 28 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 12 முறை 4 அல்லது அதற்கும் குறைவான ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளார். இதில் 7 முறை ரன் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
இதனைச் சுட்டிக்காட்டிய இயன் சாப்பல் சானல் 9 வர்ணனையின் போது, “இது டேனி மாரிசன் மற்றும் கிளென் மெக்ரா ரக பேட்டிங்” என்று கிண்டல் செய்தார்.
கிளென் மெக்ரா 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 35 டக்குகளுடன் 7.36 என்ற சராசரி வைத்துள்ளார். நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய வர்ணனையாளருமான டேனி மாரிசன் 48 ஆட்டங்களில் 24 முறை ரன் எதுவும் எடுக்கவில்லை. மாரிசனின் சராசரி 8.42.
ஒரு சர்வதேச டெஸ்ட் வீரராக தன்னை உயர்த்திக் கொள்ள ஷான் மார்ஷ் போராடி வரும் நிலையில் 35 மற்றும் 24 டக்குகளை அடித்த வீரர்களுடன் ஷான் மார்ஷ் ஒப்பிடப்படுவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.