

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் நேற்று பெர்த்தில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேரம் முடிவில் 90 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் குவித்தது.
தொடக்க ஜோடியான வார்னர்-பர்ன்ஸ் முதல் விக்கெட்டுக்கு 22.4 ஓவரில் 101 ரன் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. பர்ன்ஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் உஸ்மான் ஹவாஜா, வார்னருடன் இணைந்தார். இந்த ஜோடி நியூஸிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. வார்னர் 118 பந்திலும், ஹவாஜா 132 பந்திலும் சதம் அடித்தனர்.
ஸ்கோர் 403 ஆக இருந்த போது ஹவாஜா ஆட்டமிழந்தார். அவர் 186 பந்தில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 121 ரன் எடுத்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய வார்னர் 236 பந்தில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இது அவருக்கு முதல் இரட்டை சதமாகும். வார்னர் ஏற்கெனவே முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2004க்கு பிறகு நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸி. வீரர் இரட்டை சதம் அடிப்பது இது தான் முதல் முறை. லாங்கர் 2004ல் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருந்தார். மேலும் ஆஸி. வீரர்களால் அதிவேகமாக அடிக்கப்பட்ட 3வது இரட்டை சதம் இதுவாகும். கில்கிறிஸ்ட் 212 பந்திலும், மைக்கேல் கிளார்க் 226 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் குவித்தது. வார்னர் 244, ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முதல் டெஸ்டை போன்று 8 வீரர்களை பந்துவீசச் செய்தும் நியூஸிலாந்து அணியால் ஆஸி. அணியின் ரன்குவிப்பை எந்த ஒரு கட்டத்திலும் கட்டுப் படுத்த முடியாமல் போனது. இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.