

டெல்லியில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ஃரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
டெல்லியில் உலகக்கோப்பைக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி (ஐஎஸ்எஎஸ்எப்) நடந்து வருகிறது. 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி திவ்யான்ஷ் சிங் பன்வார், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஆகியோர் தலா 10.4, 10.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
உலகின் முதலிடத்தில் இருக்கும் ஹங்கேரியைச் சேர்ந்த இஸ்த்வன் பெனி, எஸ்தர் டெனிஸ் ஜோடி 10 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது. அமெரிக்காவின் மேரி கரோலின் டக்கர், லூகாஸ் கோஸின்ஸ்கி ஜோடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்திய ஆடவர் அணி கத்தார் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய வீரர்கள் குர்ஜோத் கான்குரா, மைராஜ் அகமது கான், அங்காத் விர் சிங் பாஜ்வா ஆகியோர் தங்கம் வென்றனர்.
இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா 5-வது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
மற்றொரு இந்திய ஜோடியான அஞ்சும் மோட்கில், அர்ஜுன் பபுட்டா ஜோடி 418 புள்ளிகள் பெற்று தகுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் சுற்றில் 5-வது இடத்தையே பிடித்தது. இதனால் இறுதிப்போட்டிக்கு இந்திய ஜோடியால் தகுதி பெற முடியவில்லை.
இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் இந்தத் தொடரில் பெறும் 2-வது பதக்கமாகும். இதற்கு தனிநபர் பிரிவில் திவ்யான்ஷ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால், தனிநபர் பிரிவில் இளவேனில் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பரினாஸ் தாலிவால், கார்த்திகி சிங் சக்தாவத், கனேமாத் செகான் ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் ஜோடியிடம் 4-6 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவு ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் சவுத்ரி, பாக்கேர் ஜோடி, 16-12 என்ற கணக்கில் ஈரானின் கோல்நாஷ் செபாட்டோலாஹி, ஜாவித் பரூக்கி ஜோடியை வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதே பிரிவில் இந்தியாவின் யாஹஸ்வினி சிங் தேஸ்வால், அபிஷேக் வர்மா ஜோடி 17-13 என்ற புள்ளிக்கணக்கில் துருக்கியின் செவால லேதா தார்ஹன், இஸ்மாயில் கேல்ஸ் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.