

யுவராஜ் சிங், யூசுப் பதானின் காட்டடி ஆட்டத்தால் ராய்ப்பூரில் நேற்று நடந்த ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்.
முதலில் பேட் செய்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
அதேபோல காட்டடி மன்னன் யூசுப் பதான் 36 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்ட நாயகன் விருது யூசுப் பதானுக்கும், தொடர் நாயகன் விருது இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷனுக்கும் வழங்கப்பட்டது.
யுவராஜ் சிங், யூசுப் பதான் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரின் அதிரடி ஆட்டம்தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், வெற்றிக்கும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரேந்திர சேவாக் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சின் 30 ரன்களில் வெளியேறினார்.
இலங்கை அணி தரப்பில் ஹிராத், ஜெயசூர்யா, மகரூப், வீரரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. திலகரத்னே, ஜெயசூர்யா கூட்டணி நல்ல தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தில்ஷன் 21 ரன்களில் யூசுப் பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கி சமரா சில்வா (2), உபுல் தாரங்கா (13) ரன்களில் வெளியேறினர்.
நிதானமாக ஆடிய ஜெயசூர்யா 43 ரன்களில் யூசுப் பதான் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜெயசிங்கே, வீரரத்னே ஜோடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், கோனியின் பந்துவீச்சில் வீரரத்னே ஆட்டமிழந்ததுதான் திருப்புமுனையாக அமைந்தது.
வீரரத்னே 38 ரன்களில் கோனி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. குலசேகரா, ஜெயசிங்கே களத்தில் இருந்தனர்.
முனாப் படேல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜெயசிங்கே சிக்ஸர் அடித்து 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் ஆட்டம் பரபரபப்பானது. குலசேகரா 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜெயசிங்கேவிடம் கொடுத்தார்.
ஆனால், 5-வது பந்தில் ஜெயசிங்கே 40 ரன்களில் வினய் குமாரால் ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசிப் பந்தில் மகரூப் டக் அவுட்டில் வெளியேற இலங்கை தோல்வி உறுதியானது.
20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் யூசுப் பதான், இர்ஃபான் பதான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.