Last Updated : 22 Mar, 2021 03:12 AM

 

Published : 22 Mar 2021 03:12 AM
Last Updated : 22 Mar 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: மாரத்தானாக நீண்ட பாட்மிண்டன் போட்டி

மிகக் குறைந்த நேரத்தில் முடியும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று பாட்மிண்டன். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் பாட்மிண்டன் போட்டிகளின் முடிவு நிச்சயிக்கப்படும். இந்தச் சூழலில் உலகின் மிக நீண்ட பாட்மிண்டன் போட்டியாக ஜப்பானின் குருமி யொனாவோ - நவோகோ ஃபுகுமான் ஜோடிக்கும் இந்தோனேஷியாவின் கிரேசியா போலி - நித்யா கிரிண்டா மஹேஸ்வரிக்கும் இடையே நடந்த பாட்மிண்டன் போட்டி விளங்குகிறது. 2016-ம் ஆண்டில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் அரை இறுதிச் சுற்றில் இந்த ஜோடிகளுக்கு இடையே நடந்த போட்டியானது 2 மணி 41 நிமிடங்களுக்கு நீடித்தது.

2016 ஒலிம்பிக் போட்டியில் இடம் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த குருமி யொனாவோ - நவோகோ ஃபுகுமான் ஜோடி, அதற்கான வழியாக ஆசிய பாட்மிண்டன் போட்டியை தேர்ந்தெடுத்தது. இப்போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்ட இந்த ஜோடி, அனாயாசமாக அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இம்முறை அவர்களுக்கு வெற்றி அத்தனை எளிதாக இல்லை. 2015-ல் நடந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தோனேஷிய ஜோடி, ஜப்பானிய ஜோடிக்கு கடும் சவாலாக இருந்தது.

முதல் சுற்றை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேஷிய ஜோடி வென்றது. ஆனால் மனம் தளராமல் போராடிய ஜப்பானிய ஜோடி, அடுத்த 2 சுற்றுகளையும் வென்றது. இதன்மூலம் 13-21, 21-19, 24-22 என்ற செட்கணக்கில் வெற்றியைக் கைப்பற்றியது.

ஆனால் இத்தனை கடுமையாக போராடி இறுதிச் சுற்றை எட்டிய குருமி யொனாவோ - நவோகோ ஃபுகுமான் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதில் மற்றொரு ஜப்பானிய ஜோடியான மசுடோமோ - டகஹாஷி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x