Published : 21 Mar 2021 06:38 PM
Last Updated : 21 Mar 2021 06:38 PM

ஐபிஎல் 2021: வீரருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் 10 நாட்கள் தனிமை; இருமுறை பரிசோதனை: பிசிசிஐ எஸ்ஓபி வெளியீடு

கோப்புப்படம்

மும்பை

ஏப்ரல் 9-ம் தேதி தொடங்க இருக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் அணிகள் நிர்வாகிகள், வீரர்கள், அணி ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை (எஸ்ஓபி) பிசிசிஐ அமைப்பு வெளியிட்டுள்ளது.

14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பயிற்சியைத் தொடங்கிவிட்டன. இந்த முறை கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

ஏறக்கறைய 50 நாட்களுக்கும் மேலாக நடக்கப்போகும் இந்த ஐபிஎல் திருவிழாவில் வீரர்கள், அணி நிர்வாகிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ தயாரித்து அந்தந்த அணி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

  • வீரர்கள் யாரேனும் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பயோ-பபுள் சூழலுக்குள் வருவதற்கு முன் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பின்புதான் அனுமதிக்கப்படுவார்.
  • வீரர்கள் பயோ-பபுள் சூழலில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க தனியாக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். இவரின் பணி, வீரர்கள் பயோ-பபுள் சூழலை மீறுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும்தான்.
  • ஒட்டுமொத்தமாக 12 பயோ-பபுள் சூழல் உருவாக்கப்பட்டுள்ளன. 8 பயோ-பபுள் சூழல் வீரர்களுக்கும், 2 பயோ-பபுள் சூழல் அணி நிர்வாகிகள், உதவியாளர்களுக்கும், 2 பயோ பபுள் சூழல் ஊடகப்பிரிவினர் ஆகியோருக்கும் வழங்கப்படும்.
  • பயோ-பபுள் சூழலுக்குள் வீரர் ஒருவர் நுழையும் முன் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பயோ-பபுள் சூழலுக்குள் வீரர் ஒருவர் செல்லும்போது, 7 நாட்கள் தனிமைக் காலத்தில் 2-ம் நாள், 5-ம் நாள், 7-வது நாள் கரோனா பரிசோதனை செய்யப்படும். அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக இருக்க வேண்டும்.
  • முறையான பரிசோதனை இல்லாமல் அணி உறுப்பினர்களுடன் கலந்துரையாட அனுமதியில்லை.
  • 7 நாட்கள் தனிமைக் காலம் முடிந்தபின், ஒவ்வொரு வீரருக்கும் வாரத்துக்கு இரு முறையும், 2-வது வாரம், ஒவ்வொரு வாரத்திலும் 5-வது நாளும் என ஐபிஎல் சீசன் முடியும் வரை கரோனா பரிசோதனை தொடர்ந்து செய்யப்படும். இந்த விதிமுறை வெளிநாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.
  • இங்கிலாந்து, இந்திய ஒருநாள் தொடரில் இரு அணி வீரர்களும் பயோ-பபுள் சூழலில் இருந்து வருவதால், அவர்களுக்குத் தனிமைப்படுத்தும் முறை இல்லை. வீரர்கள் நேரடியாக தாங்கள் சார்ந்திருக்கும் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் செல்லலாம்.
  • வீரர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அணியில் இணையத் தனியாக விமானம், அல்லது ஹோட்டலுக்குச் செல்ல தனிப்பட்ட பேருந்து வசதி செய்யப்படும். இங்கிலாந்து வீரர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்களும் பயோ-பபுள் சூழலில் இருந்து வந்தால் தனிமைப்படுத்தும் காலம் இல்லை.
  • ஒருவேளை வீரர்கள் ஐபிஎல் விதிகளுக்கு மாறாக பயோ-பபுள் சூழலை மீறினால் கண்டிப்பாக ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • ஐபிஎல் தொடரில் தாமதமாக அணிகளில் சேரும் வீரர்கள் தங்கள் அணியின் பயோ பபுள் விதிகளுக்கு உட்பட்டு தனிமைக் காலத்தை முடித்துவர வேண்டும்.
  • வீரர்களில் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அவருக்கு 9-வது 10-வது நாளில் எடுக்கப்படும் பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும். எந்தவிதமான அறிகுறியும் இருக்கக் கூடாது. இந்த விதிமுறை அறிகுறி உள்ள வீரர்களுக்கும், அறிகுறி இல்லாத வீரர்களுக்கும் பொருந்தும்.
  • ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கரோனா தடுப்பூசி போடக்கூடாது. மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட பிரிவு ஒதுக்கவில்லை என்பதால், தடுப்பூசி போடக்கூடாது.

இவ்வாறு விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x