

100-வது டெஸ்ட் போட்டியில் நாளை (சனிக்கிழமை) களம் காணும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், தனது பயணம், களத்தில் தனது மன நிலை ஆகியவை பற்றி பேட்டி அளித்துள்ளார்.
களத்தில் ‘மிகவும் நல்லவர் டிவில்லியர்ஸ்’ என்று அவர் மீது எழுந்துள்ள ஒரு பிம்பம் பற்றி கூறும்போது, “கிரிக்கெட் ஆட்டத்தில் எங்கள் அணி வெற்றி பெறுவதற்காக அனைத்தையும் செய்வேன். ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டுமா, நான் அதிலும் ஈடுபடுவேன். எதிரணி வீரர்களை காயப்படுத்த வேண்டும் என்றால் அதையும் செய்ய முயற்சிப்பேன். விராட் கோலியின் பேட்டிங் உத்தி பற்றி விமர்சிப்பேன், அவர் செய்யும் சிறு தவறுகளைப் பற்றி களத்தில் பேசுவேன். இவையெல்லாம் செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.
களத்தில் நான் விரும்பத்தக்கவன் அல்ல. அதே போல் களத்தில் விரும்பத் தகுந்தவராக நடந்து கொள்ளும் நபரையும் நான் மதிப்பதில்லை. எதிரணியினர் கடுமையாக ஆடி தங்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல தீவிரமாகச் செயல்பட வேண்டும், இதனையே நான் பெரிதும் விரும்புவேன்.
ஆனால் களத்துக்கு வெளியே நான் ஒரு நல்ல மனிதனாக நடந்து கொள்வேன். இது நல்ல மனிதனாக நடந்து கொள்வது என்பதையும் விட ஆழமாகவே செல்லும். கிரிக்கெட்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்றார்.
100-வது டெஸ்ட் மைல்கல் பற்றி கூறும்போது,
100-வது டெஸ்ட் ஆடுவது ஒரு மிகப்பெரிய கவுரவம். இப்படிப்பட்ட ஒருநிலைக்கு வருவேன் என்று நான் என் வாழ்க்கையில் கனவிலும் நினைக்கவில்லை. ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்த விரும்புகிறேன், இந்த (பெங்களூர் டெஸ்ட்) டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். தொடரில் மீண்டும் எழுச்சிபெற விரும்புகிறோம்.
எனது சாதனைகளை நான் கொண்டாடுவதில்லை. இது குறித்து விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் எனக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லை. ஆனால் ஓய்வு பெற்றவுடன் இவை ஒரு சிறப்பான தருணங்களாக நினைவில் மிஞ்சும். ஆனாலும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டேன், ஆனால் இந்தத் தருணத்தில் கொண்டாட்டங்கள் இல்லை.
நாளை நான் 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதினால் எனக்கு அழுத்தம் இல்லை தொடரில் 0-1 என்று பின் தங்கிய நிலையில் இறங்குகிறோம் அதுதான் அழுத்தம் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ். நாளை, சனிக்கிழமை இந்தியா- தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இது டிவில்லியர்ஸின் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.