Last Updated : 19 Mar, 2021 03:14 AM

 

Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: பாராலிம்பிக்ஸ் பிறந்த கதை

1948-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடந்தது. இந்த விழாவை வித்தியாசமான முறையில் நடத்தும்விதமாக உலகப் போரில் காயமடைந்து மாற்றுத் திறனாளிகளான 16 வீரர்கள் பங்கேற்ற வில்வித்தை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்மேன் என்ற டாக்டரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வில்வித்தை போட்டிக்கு ‘ஸ்டோக் மண்டேவிலி கேம்ஸ்’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் போட்டிதான் பின்னாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு விதையாக இருந்தது. 1948-ம் ஆண்டுக்கு பிறகு மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இருப்பினும் அவர்களுக்கான முழுமையான விளையாட்டுப் போட்டி, சர்வதேச அளவில் நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில் 1960-ம் ஆண்டு ரோம் நகரில் முதலாவது பாராலிம்பிக்ஸ் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட வீரர்களே பெருமளவில் கலந்துகொண்டனர்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் நடந்த முதல் சர்வதேச போட்டி என்பதால், இதில் அவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாமல் இருந்தன. குறிப்பாக மாடிகளில் உள்ள ஓட்டல் அறைகளுக்கு சக்கர நாற்காலிகள் செல்ல சாய்வுதளங்கள் இல்லாததால், மற்றவர்கள் அவர்களை தூக்கிச் செல்லவேண்டி இருந்தது. இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், காலம் செல்லச் செல்ல பாராலிம்பிக்ஸ் போட்டிகள் முன்னேற்றத்தைச் சந்தித்தன.

1976-ம் ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன. குண்டு எறியும் போட்டி, ஓட்டப் பந்தயம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் களைகட்டத் தொடங்கின. முதல் பாராலிம்பிக்ஸ் போட்டியில் 400 வீரர்களே கலந்துகொண்ட நிலையில் 2016-ம் ஆண்டு ரியோ நகரில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் 159 நாடுகளைச் சேர்ந்த 4,342 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 22 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் சீனா, அதிகபட்சமாக 107 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x