Last Updated : 17 Mar, 2021 06:52 PM

 

Published : 17 Mar 2021 06:52 PM
Last Updated : 17 Mar 2021 06:52 PM

வீரர்களுக்கு அதிகமான ஓய்வும், அடிக்கடி மாற்றுவதும் அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும்: கோலியைச் சாடிய கவுதம் கம்பீர்

வீரர்களுக்கு அதிகமான ஓய்வும், அடிக்கடி மாற்றுவதும் அணியில் பிரச்சினையை ஏற்படுத்தும். டி20 உலகக்கோப்பை போட்டிக்காக 7 மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகிய சூர்யகுமார் யாதவை 3-வது டி20 போட்டியிலிருந்து கோலி நீக்கியது வியப்பாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ் 2-வது டி20 போட்டியில் அறிமுகமானார். ஆனால், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அகமதாபாத்தில் நேற்று நடந்த 3-வது ஆட்டத்தில் ரோஹித் சர்மா வரவேண்டும் என்பதற்காக எந்தவிதமான வாய்ப்பும் பெறாத சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியான முடிவாகத்தான் இருந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கிரிக்இன்போ தளத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலையாக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவை ஒரு போட்டியோடு இந்திய அணியிலிருந்து விராட் கோலி நீக்கியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. டி20 உலகக்கோப்பை போட்டிக்காக 7 மாதங்களுக்கு முன்பிருந்தே சூர்யகுமார் தயாரானார். இந்த உலகக்கோப்பை முடிந்தபின்பும் அடுத்தப் போட்டிக்குத் தயாராவார். அது ஒரு விஷயம் இல்லை. நீங்கள் எப்படி பேட்டிங் ஃபார்மில் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

சிறிது கற்பனை செய்து பாருங்கள், ஏதாவது காயம் ஏற்பட்டால், சூர்யகுமார் யாதவைத்தான் தேர்வு செய்தாக வேண்டும். அதற்கு சூர்யகுமார் யாதவ் சர்வதேசப் போட்டியில் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். எந்த வீரருக்கும் காயம் ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கிறேன். ஆனால், ஒருவேளை காயம் ஏற்பட்டால், 4-வது அல்லது 5-வது வரிசையில் ஆடுவதற்கு நிச்சயம் ஒரு சிறந்த வீரர் தேவை.

உதாரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கும் இடத்தில் மாற்றாக எப்போதும் ஒரு சிறந்த வீரரை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும். அதற்கு சூர்யகுமார் யாதவுக்குக் குறைந்தபட்ச வாய்ப்புகளைக் கொடுத்து நாம் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளித்து அவரை நாம் தயார்படுத்த வேண்டும்.

வீரர்களுக்கு அதிகமான ஓய்வு அளிப்பதும், அதிகமாக மாற்றிக்கொண்டே இருப்பதும் அணிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். நமக்கு நாமே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வோம். ஒவ்வொரு போட்டியிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியைப் பாருங்கள். பேட்டிங் வரிசையில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. நீங்கள் உங்களுக்கு நீங்களே பிரச்சினையை உருவாக்கினால், பிரச்சினை பற்றி நீங்கள் அதிகமாகப் பேச வேண்டியது வரும்.

திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. நம்மிடம் ஐபிஎல் என்ற ஒரு கட்டமைப்பு இருக்கிறது. சிறந்த அணி நிர்வாகங்கள் இருக்கின்றன. அதன் மூலம் திறமையான வீரர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்''.

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x