Last Updated : 17 Mar, 2021 02:25 PM

 

Published : 17 Mar 2021 02:25 PM
Last Updated : 17 Mar 2021 02:25 PM

அதிகரிக்கும் கரோனா; மே மாதம் இறுதிவரை ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவலையடுத்து, மாநிலங்களுக்கு இடையே நடக்கும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை மே மாதம் வரை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பையை வெற்றிகரமாக பிசிசிஐ நடத்தி முடித்தது. வீரர்கள் அனைவரையும் பயோ பபுள் சூழலுக்குள் வைத்துப் போட்டியை நடத்தி முடித்தது.

ஆனால், பிப்ரவரி மாதத்துக்குப் பின் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, ஜூனியர் அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் மே மாதம் இறுதிவரை ரத்து செய்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று இரவு அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.

அவர் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

"அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதுதான் நமது விருப்பமாக இருந்தது. ஆனால், தற்போதுள்ள சூழலில் ஜூனியர் மட்டத்திலான அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்கிறோம்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. போட்டிகளை நடத்துவதற்கு மாநிலங்களுக்கு இடைய போக்குவரத்து, கடுமையான தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், வீரர்களை பயோ பபுள் சூழலில் பாதுகாத்து வைத்தல் போன்றவை செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழல் அதற்கு ஏற்றதாக இல்லை.

இப்போது நடத்தப்பட்டு வரும் சீனியர் மட்டத்திலான வீரர், வீராங்கனைகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிசிசிஐ அமைப்பால் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டவை. 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான போட்டி கூட முன்பு அறிவிக்கப்பட்டவைதான்.

இப்போதுள்ள சூழலில் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தச் சூழல் இல்லாததால், அனைத்துப் போட்டிகளும் மே மாதம் இறுதிவரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் வினு மன்கட் கோப்பை, கூச் பெஹர் கோப்பை போன்றவை நடத்தப்படாது.

அதுமட்டுமல்லாமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுகளும் நாடு முழுவதும் நடக்கின்றன. இளம் வீரர்கள் தங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. நம்முடைய வீரர்களின் உடல்நலன், பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணுவது நமது முதன்மைக் குறிக்கோள். ஆதலால், ஐபிஎல் டி20 போட்டித் தொடர் முடிந்தபின் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x