

ஊக்க மருந்து சோதனை விவகாரத்தில் மாஸ்கோ ஆய்வு மையத்தின் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஆய்வு மையத்தின் அங்கீகாரத்தை சர்வதேச தடகள கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது. இதனால் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் உட்பட பல்வேறு தடகள போட்டிகளில் கடந்த 2001 முதல் 2012 வரை பங்கேற்ற சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகளிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 800 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.
அதிலும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 12 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா வுக்கு பதக்கங்கள் வென்று கொடுத் தவர்கள் பெரும்பாலானோர் சந் தேகத்துக்குரியவர்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட் டிருந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (டபிள்யூஏடிஏ) முன்னாள் தலைவரும் கனடா நாட்டு வழக்கறிஞருமான ரிச்சர்டு பவுண்டு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்தது. அதில் ரஷ்யா செய்த முறைகேடுகள் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில், ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனைகளில் நம்பகத்தன்மை இல்லை.
இங்கு நடத்தப்பட்ட 1400 சோதனைகளின் மாதிரி முடிவு களை, 2014ம் ஆண்டு நாங்கள் ஆய்வுக்கு செல்லும் முன்பே திட்டு மிட்டு அழித்து விட்டனர். இந்த மையத்தின் தலைவர் ராட்சென்கோ ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவர்களை காப்பாற்ற லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இந்த செயல்கள் அனைத்தும் அரசு துறைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
இதனால் மாஸ்கோ ஆய்வகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மையத்தின் தலைவர் ராட்சென்கோவை பதவி நீக்க வேண்டும். ரஷ்ய தடகள கூட்டமைப்பை இடைநீக்கம் செய்ய வேண்டும். 2016 ரியோ ஒலிம்பிக் உள்ளிட்டட சர்வதேச தடகள போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க தடைவிதிக்க வேண்டும்.
2012 ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து பயன்படுத்திய ரஷ்யாவின் மரியா சவீனோவா, பாய்ஸ்டோகோவா, அனஸ்டஸியா, கிறிஸ்டினா உகரோவா, மையாஜினா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து ஒருவார காலத்துக்குள் இதுதொடர்பாக ரஷ்யா விளக்கம் அளிக்க வேண்டும் என சர்வதேச தடகள கூட்டமைப்பு தலைவர் லார்டு கோ தெரிவித்தார். ஆனால் ரஷ்யாவோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. போதிய ஆதாரம் வழங்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் மாஸ்கோ ஊக்க மருந்து சோதனை மையத்தின் அங்கீகாரத்தை சர்வதே தடகள கூட்டமைப்பு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேவேளையில் இந்த சோதனை மையத்தின் தலைவர் ராட்சென்கோ ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ரஷ்ய விளையாட்டு துறை அமைச்சர் விட்டலி முட்கோ தெரிவித்துள்ளார்.
2012 ஒலிம்பிக்கில் ரஷ்யா பதக்க பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் மொனாக்கோவில் நாளை சர்வதேச தடகள கூட்டமைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் ரஷ்யாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.