Last Updated : 17 Mar, 2021 03:14 AM

 

Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: சாய்னாவைப் பார்க்க வராத பாட்டி

ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த சாய்னா நெவாலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 17).

1990-ல் ஹரியாணாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் சாய்னா நெவால் பிறந்தார். சாய்னாவின் பாட்டிக்கு ஆண் குழந்தைகள் மீதுதான் விருப்பம். தனக்கு பேரன்தான் பிறப்பான் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண் குழந்தை (சாய்னா நெவால்) பிறந்ததால் கோபமடைந்த பாட்டி, ஒரு மாதம் வரை குழந்தையைப் பார்க்க வராமல் இருந்துள்ளார். ஆனால் அந்தக் குழந்தையான சாய்னாதான், இன்று மொத்த குடும்பத்துக்கும் புகழை தேடிக் கொடுத்துள்ளார்.

சாய்னா குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தைக்கு ஹைதராபாத்துக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பம் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தது. முதலில் கராத்தேவில்தான் சாய்னா ஆர்வமாக இருந்துள்ளார். இதில் பிரவுன் பெல்ட் வாங்கினார். பின்னாளில் பாட்மிண்டன் வீரர் கோபிசந்த்தால் ஈர்க்கப்பட்டு, அந்த விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். சாய்னாவின் அப்பா ஹர்வீர் சிங், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் தன்னால் இயன்றவரை சாய்னா பயிற்சி பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்தார். சாய்னாவுக்கு மிகவும் பிடித்த கோபிசந்திடம் பயிற்சி பெற வழி செய்தார். ஒரு கட்டத்தில் கடன் வாங்கி, சாய்னாவின் பயிற்சிக்கு தேவையான உதவிகளைச் செய்தார். தந்தையின் கஷ்டங்களை உணர்ந்து சாய்னாவும், கடுமையாக உழைத்தார். முதல் முறையாக 2004-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் சாய்னா நெவால் வென்றுள்ளார்.

பாட்மிண்டன் உலகில் சாய்னாவின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x