2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி

அகமதாபாத்தில் நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் இந்திய அணியினர் : படம் உதவி ட்விட்டர்
அகமதாபாத்தில் நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் இந்திய அணியினர் : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும் கூட, பந்துவீச கூடுதலான நேரம் எடுத்துக்கொண்டதற்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

அகமதாபாத்தில் நேற்று இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்தப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பாக ஐசிசி எலைட் பேனலின் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம், கள நடுவர்கள் கேஎல் சவுத்ரி, அனந்தபத்மநாபன், மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மா ஆகியோர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கேப்டன் கோலியிடம் ஐசிசி நடுவர் ஸ்ரீநாத் விசாரித்தபோது, தனது குற்றத்தை கோலி ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்க ஐசிசி நடுவரி பரிந்துரைத்தார்.

இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், " கிரிக்கெட்ட வீரர்கள், உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுங்கு விதிகளின்படி, இந்தி்ய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டது. இதனால் போட்டி ஊதியத்தொகையிலிருந்து 20சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. விராட் கோலி இந்த தவறை ஒப்புக்கொண்டதால், மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை"எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in