

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் இன்று காலை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்திருந்தது. முரளி விஜய்யும், ரஹானேவும் களத்தில் உள்ளனர்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியாவுக்கு, 2-வது ஓவரிலேயே துவக்க வீரர் ஷிகர் தவன் ஏமாற்றம் தந்தார். ஃபிலாண்டர் வீசிய பந்தில் ஸ்லிப் பகுதிக்கு கேட்ச் கொடுத்து, ரன் ஏதுமின்று, தவன் பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து ஆடிய புஜாரா, விஜய் ஜோடி சிறிது நம்பிக்கை தந்தது. 21 ஓவர்கள் வரை நிலைத்து ஆடிய இந்த இணையை சுழற் பந்துவீச்சாளர் எல்கர் பிரித்தார். அந்த ஓவரில் புஜாரா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அடுத்த ஓவரிலேயே ரபாடாவின் வேகத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து ரஹானே களமிறங்கினார்.
தற்போது முரளி விஜய் 40 ரன்களுடனும், ரஹானே 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.