

அகமதாபாத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே கால்காப்பில் வாங்கி ஜோஸ் பட்லர் வெளியேறினார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியில் ஷிகர் தவண், அக்ஸர் படேலுக்கு பதிலாக இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகின்றனர்.
இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக இஷாந் கிஷன், ராகுல் களமிறங்குவார்கள். நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்.
இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட்டுக்கு பதிலாக டாம் கரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற கேப்டன் கோலி கூறுகையில் " முதலில் பந்துவீசவது என முடிவு செய்துள்ளோம். இந்த ஆடுகளம் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுக்கும் சாதகமாக இருக்கிறது. பனிப்பொழி கடந்த போட்டியில் இல்லை. ஆதலால், முதலில் பந்துவீசி இங்கிலாந்து அணியை கட்டுக்குள் வைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
ஆடுகளம் எப்படி:
முதல் டி20 போட்டிக்கு இருந்த ஆடுகளத்தைவிட இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும். அதிலும் குறிப்பாக ஆடுகளத்தில் அதிகமான புற்கள் இல்லாததால், சேஸிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும்.