Last Updated : 13 Mar, 2021 08:24 PM

 

Published : 13 Mar 2021 08:24 PM
Last Updated : 13 Mar 2021 08:24 PM

நாளை 2-வது டி20 போட்டி: சஹலுக்கு பதிலாக திவேட்டியா? பேட்டிங்கில் மிரட்டாவிட்டால் மீண்டும் தோல்வி நிச்சயம்; கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவை

அகமதாபாத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஆலோசித்த காட்சி: படம் | ட்விட்டர்.

அகமதாபாத்

அகமதாபாத்தில் நாளை நடக்கும் 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சவால் விடுக்க இந்திய அணிக்கு வலிமையான பேட்டிங் வரிசையும், கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரும் அவசியம்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

முதல் டி20 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், தவண், ரிஷப் பந்த், பாண்டியா 4 பேரும் சொதப்பினர். இதில் ராகுல் ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டம் என்றால், பாண்டியா, ரிஷப் பந்த் இருவரும் தவறான ஷாட்களை ஆடித்தான் விக்கெட்டுகளை இழந்தார்கள். ஃபார்மில் இல்லாத தவணை எடுத்தது மிகப்பெரிய தவறு. இவருக்குப் பதிலாக 'ஹிட் மேன்' ரோஹித் சர்மாவை நாளைக் களமிறக்குவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

ஒரு தோல்வியை வைத்து இந்திய அணியின் பேட்டிங் வரிசையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும், இன்னும் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வீரர்கள் பேட் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

அதிலும் 'பிக் ஹிட்டர்ஸ்' எனச் சொல்லக்கூடிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ராகுல் மூவரும் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. இந்த 3 பேட்ஸ்மேன்களும் நாளை முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

பெஞ்ச்சில் சூர்யகுமார் யாதவை அமர வைத்திருப்பதற்குப் பதிலாக, அவருக்கு வாய்ப்பு அளித்து அணிக்குள் கொண்டுவர வேண்டும். ஏன் விராட் கோலி கூட ஒரு போட்டியில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே?

ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில், அணியை விளையாட வைத்து தனது இடத்தை சூர்யகுமார் யாதவுக்கு வழங்கலாம். அப்போதுதான் இளம் வீரர்களின் திறமையைக் கண்டறிய முடியும்.

ஷிகர் தவண் போன்ற வயதான வீரர்கள் இனிமேல் டி20 போட்டிக்குச் சரிவரமாட்டார்கள். ஷிகர் தவணுக்கு பதிலாக இஷான் கிஷனை மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்திய அணியில் மெகா ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் போதுமான வாய்ப்பை வழங்காமல் இருப்பதே அவர்கள் ஜொலிக்க முடியாமல் போவதற்குக் காரணமாகும். விராட் கோலியே அனைத்துப் போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பேற்பதற்கு பதிலாக தனது இடத்தை மற்றொரு வீரருக்குக் கொடுத்து ஆட வாய்ப்பளிக்க வேண்டும்.

பந்துவீச்சில் நாளை ஆட்டத்தில் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்காமல் கூடுதலாக வேகப்பந்துவீச்சாளரை வைத்திருப்பது சிறந்தது. இதில் நவ்தீப் ஷைனிக்கு பதிலாக, தீபக் சஹரைச் சேர்க்கலாம். ஷைனியைவிட பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்.

சுழற்பந்துவீச்சில் சஹலுக்கு பதிலாக ராகுல் திவேட்டியாவைக் களமிறக்கலாம். சஹலும், திவேட்டியாலும் லெக் ஸ்பின்னர்கள்தான். சஹலைவிட நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய வீரர் திவேட்டியா என்பதால் களமிறக்கி முயலலாம்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை வலிமையான டாப் ஆர்டர், மிரட்டும் நடுவரிசை, பின்வரிசையில் ஓரளவுக்கு பேட் செய்யக்கூடிய வீரர்கள் என பேட்டிங்கில் மிரட்டுகிறார்கள். பந்துவீச்சில் ஆர்ச்சர், ஜோர்டன், மார்க் உட், சாம் கரன், டாம் கரன் என வேகப்பந்துவீச்சுக்கு படையே இருக்கிறார்கள்.

சுழற்பந்துவீச்சை பெரிதாக நம்பாத இங்கிலாந்து கேப்டன் மோர்கன், கடந்த போட்டியில் அதில் ரஷித்துக்கு மட்டுமே வாய்ப்பளித்தார். அதேபோன்று நாளைய போட்டியில் ரஷித்துக்கு பதிலாக, மொயின் அலி களமிறக்கப்படலாம்.

ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு வகையான வீரர்களைப் பயன்படுத்தி, இந்திய அணிக்கு மிரட்டல் விடுத்து, குழப்பத்துடனே வைத்திருப்பதே இங்கிலாந்து அணியின் திட்டமாகும். இதை நாளை எவ்வாறு இந்திய அணி முறியடிக்கும் என்பது தெரிந்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x