Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து டி20-ல் இன்று மோதல்: ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்குகிறார் கே.எல்.ராகுல்

அகமதாபாத்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளதால் அந்தத் தொடருக்கான சிறந்த அணியை உருவாக்குவதற்கான முன்னோட்டமாக இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் அமையக்கூடும் என கருதப்படுகிறது. மேலும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர்களின் திறனை சோதித்து பார்க்க இது சிறந்த வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அகமதாபாத் ஆடுகளம் தட்டையானது என்பதால் இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே ரன்வேட்டைக்கு உகந்ததாக இருக்கக்கூடும். இந்திய அணியை பொறுத்தவரையில் விளையாடும் லெவனை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு 'மகிழ்ச்சியான தலைவலி' நிகழக்கூடும். ஏனெனில் அணியில் இடம் பிடித்துள்ள இளம் வீரர்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.

எனினும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இதுபோன்று மாற்றங்களை செய்து எதிர்வினையை இந்திய அணி தேடிக்கொண்டது. அந்த உலகக் கோப்பையில் கடைசி வரை 4-வது வரிசைக்கான வீரர் செட்டில்ஆகவில்லை.

இதனால் கடந்த முறை செயல்படுத்திய வழிமுறைகள் குறித்து அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ளக்கூடும். ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்குவதை கேப்டன் விராட் கோலி நேற்று உறுதி செய்தார். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலோ அல்லது கே.எல்.ராகுல் காயம் அடைந்தால் மட்டுமே ஷிகர் தவணுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கோலி திட்டவட்டமாக கூறினார்.

பேட்டிங்கில் 4-வது வரிசை இடத்துக்கு ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே போட்டி நிலவக்கூடும். இதில் ஸ்ரேயஸ் ஐயர் அனுபவம் கொண்டவர். சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி கவனத்தை ஈர்த்தவர்.

மேலும் டி 20 போட்டிகளுக்கு தகுந்தபடி புதிய வகை ஷாட்களையும், களமிறங்கிய உடனே அதிரடியாக விளையாடும் திறனையும் கொண்டவர். 5-வதுமற்றும் 6-வது இடத்தில் கள மிறங்கும் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் இருந்து அதிரடி பேட்டிங் வெளிப்படக்கூடும்.

அதிலும் ரிஷப் பந்த், டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட் செய்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் ஆல்ரவுண்டராக முழு திறனை வெளிப்படுத்தக்கூடும்.

பந்து வீச்சில் காயம் காரணமாக டி.நடராஜன் இடம் பெறவில்லை. இதனால் அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் பந்துவீச்சு துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடும். அவருடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாள ராக இடம் பெறுவதில் தீபக் ஷாகர், ஷர்துல் தாக்குர் இடையே போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், வேகம் குறைந்த பந்துவீச்சு மற்றும் சுழலில் சற்று திணறக்கூடியவர்கள் என்பதால் யுவேந்திர சாஹலுடன் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகி யோர் விளையாடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் வியூகத்தை கையாண்டு வருகிறது. கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், டேவிட் மலான், ஜேசன் ராய், சேம் கரண், மொயின் அலி ஆகியோர் தங்களது மட்டை வீச்சால் எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், மார்க் வுட் ஆதில் ரஷித் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

நேரம்: இரவு 7 மணி

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x