விளையாட்டாய் சில கதைகள்: குண்டு எறியும் போட்டியின் கதை

விளையாட்டாய் சில கதைகள்: குண்டு எறியும் போட்டியின் கதை
Updated on
1 min read

குண்டு எறியும் போட்டியின் பிறப்பிடம் என்று கிரேக்க நாட்டைக் கூறலாம். பண்டைய காலத்தில் ராணுவ வீரர்களின் பலத்தை சோதிப்பதற்காக, இந்தப் போட்டியை கிரேக்க மன்னர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரம், தங்கள் நாட்டில்தான் குண்டு எறியும் போட்டி தோன்றியது என்று ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர். இப்போட்டியில் ஆரம்ப காலகட்டத்தில் கனமான கற்களை ஒற்றைக் கையால் தூக்கி, நீண்ட தூரம் வீசும் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

காலம் செல்லச் செல்ல, இந்த போட்டியின் வடிவம் மாறியது. கனமான கற்களுக்குப் பதில் இரும்பு குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 1896-ம் ஆண்டில் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், குண்டு எறியும் போட்டி சேர்க்கப்பட்டது. இதில் பங்கேற்கும் வீரர்கள் 2.135 மீட்டர் விட்டம் கொண்ட வட்டத்துக்குள் இருந்துகொண்டு, ஒற்றைக் கையால் 7.26 கிலோ இரும்பு உருண்டையை வீசவேண்டும்.

குண்டை வீசும்போது குறிப்பிட்ட வீரரோ, வீராங்கனையோ வட்டத்தைவிட்டு வெளியில் சென்றால், அது ஃபவுலாக அறிவிக்கப்படும். மேலும், அவர் குண்டை எறிந்த தூரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. போட்டியில் அதிக தூரத்துக்கு இரும்பு குண்டை வீசும் நபர், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்ற விதி உருவாக்கப்பட்டது. இப்போட்டியில் பெண்கள் பயன்படுத்தும் குண்டுகளின் எடை 4 கிலோவாக உள்ளது. 1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான குண்டு எறியும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெண்களுக்கான பிரிவில் 1948-ம் ஆண்டிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டது. 1990-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த போட்டி ஒன்றில், அந்நாட்டைச் சேர்ந்த ராண்டி பார்னஸ் என்ற வீரர் 23.12 மீட்டர் தூரத்துக்கு குண்டு வீசினார். இதுவே தற்போது உலக சாதனையாக உள்ளது. பெண்கள் பிரிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடாலியா லிசோஸ்காயா என்பவர் 22.63 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்தது உலக சாதனையாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in