

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
218 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க, ஜடேஜா - அஸ்வின் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மீண்டும் ஸ்பின்னர்கள் அபாரம்
தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸில், கேப்டன் கோலி துவக்கத்திலேயே சுழற் பந்துவீச்சை களமிறக்கினார். அதற்கு கை மேல் பலனாக, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ஃபிலாண்டரை வெளியேற்றினார்.
தொடர்ந்து டூ ப்ளெஸ்ஸிஸ் 1 ரன்னுக்கு அஸ்வின் சுழலிலும், ஆம்லா ஜடேஜாவின் பந்துவீச்சிலும், தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் டி வில்லியர்ஸ் மிஷ்ராவின் சுழலுக்கும் ஆட்டமிழந்தனர்.
சில ஓவர்களுக்குப் பின் 2-வது இன்னிங்ஸில் தனது முதல் ஓவரை வீச வந்த வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், எல்கரை (16 ரன்கள்) வீழ்த்தினார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர் விலாஸ் 7 ரன்களுக்கு ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வான் ஸைல், ஹார்மர் இருவரும் கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்தனர். இவர்கள் இணை 42 ரன்கள் குவித்தது. சில ஓவர்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பந்துவீச வந்த ஜடேஜா ஹார்மரை (11 ரன்கள்) வெளியேற்ற, அடுத்த ஓவரில் அஸ்வின், வான் ஸைலை (36 ரன்கள்) பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த ஆட வந்த ஸ்டெய்ன் 2 ரன்கள் எடுத்து அஸ்வின் வீச்சில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
106 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி விக்கெட்டான தாஹிரை (4 ரன்கள்) ரவீந்திர ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்த, இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா, வருண் ஆரோன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் முடியும் முன்னரே மொத்த ஆட்டம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம். ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2-வது இன்னிங்ஸிலும் சொதப்பிய பேட்டிங்
முன்னதாக, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இன்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா - கோலி இணை ஆரம்பத்தில் சிறிது நிலைத்து ஆடினாலும், கோலி - புஜாரா - ரஜானே விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததில் இந்திய பேட்டிங் ஆட்டம் கண்டது.
உணவு இடைவேளை முடிந்த சில ஓவர்களில் இந்தியா 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர், தாஹிர் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முன்னிலை 17 ரன்களோடு சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.