

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் போட்டி வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது கிரிக்கெட் வாழ்வில் சிறந்த ரேங்கிங்கைப் பெற்றுள்ளார்.
அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ரிஷப் பந்த் 747 புள்ளிகளுடன் 7 இடங்கள் நகர்ந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தற்போது ரோஹித் சர்மா, நியூஸிலாந்து வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோருடன் 7-வது இடத்தை ரிஷப்பந்த் பகி்ர்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப்பந்த் பெறும் மிகச்சிறந்த தரவரிசை இதுவாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 96 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்த வாஷிங்டன் சுந்தர் 39 இடங்கள் நகர்ந்து 69-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆனால், டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்ட கேப்டன் விராட் கோலி, சத்தேஸ்வர் புஜாரா இருவரும் தரவரிசையில் பின்தங்கியுள்ளனர்.
விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் கோலி எடுக்கும் மிகக்குறைவான புள்ளி இதுவாகும்.
புஜாரா 697 புள்ளிகளுடன் 13-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக டாப் 10 வரிசையில் நீடித்துவந்த புஜாரா முதல்முறையாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டுக்குப்பின் புஜாரா டெஸ்ட் தரவரிசையில் 700 புள்ளிகளுக்கும் கீழ்முதல் முறையாகக் குறைந்துள்ளார்.
டெஸ்ட் தொடரில் கலக்கிய ரவிச்சந்திர அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 850 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் 4-வது இடத்துக்கு அஸ்வின் ஏற்றம் கண்டுள்ளார்.
அறிமுகத் தொடரிலேயே 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல், 8 இடங்கள் நகர்ந்து, 552 புள்ளிகளுடன், 30-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலேயே அதிகமான புள்ளிகளை எடுத்த 3-வது வீரர் எனும் பெருமையை அக்ஸர் படேல் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்திய வீரர் நரேந்திர ஹிர்வானி 564 புள்ளிகளும், ஆஸ்திரேலிய வீரர் சார்லி டர்னர் 553 புள்ளிகளும் எடுத்திருந்தனர். அதன்பின் தற்போது அக்ஸர் படேல் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் டான் லாரன்ஸ் இரு அரைசதங்கள் அடித்ததன் மூலம், தரவரிசையில் 47 இடங்கள் நகர்ந்து 97-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 2 இடங்கள் நகர்ந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.