Last Updated : 11 Mar, 2021 03:12 AM

 

Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: முதல் வெற்றியை தந்த கேப்டன்

ரஞ்சி கோப்பை போட்டிக்கு இணையாக உள்ளூரில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் கிரிக்கெட் தொடராக விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடர் விளங்குகிறது. இந்த தொடருக்கு பெயர்க் காரணமாக விளங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஹசாரேவின் பிறந்தநாள் இன்று (மார்ச் 11).

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி என்ற ஊரில் 1915-ம் ஆண்டில் பிறந்தவர் விஜய் ஹசாரே. ஒரு வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் ஹசாரே, பின்னாளில் சுழற்பந்து வீச்சாளராக மாறினார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்த கிளாரி கிம்மெட் என்ற பயிற்சியாளரின் அறிவுரையை ஏற்று பேட்டிங்கில் கவனம் செலுத்தினார்.

1946-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹசாரே, 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 65 ரன்களைக் குவித்ததுடன், 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். பின்னாளில் இந்தியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த ஹசாரே, 30 டெஸ்ட் போட்டிகளில் 2,192 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் 20 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

முதல்தர கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்த முதல் இந்தியர், ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர், அடுத்தடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக விஜய் ஹசாரே விளங்குகிறார். 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தும் விஜய் ஹசாரே வழிகாட்டி உள்ளார். 1952-ம் ஆண்டில் இவரது தலைமையில்தான் இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1953-ம் ஆண்டில் சர்வதேசகிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற விஜய் ஹசாரே, அதன்பிறகு சில காலம் தேர்வாளராகவும் இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x