Last Updated : 10 Mar, 2021 03:11 AM

 

Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்தோ - பாக் எக்ஸ்பிரஸ்

கிரிக்கெட், ஹாக்கி, குத்துச்சண்டை என்று எந்த போட்டியாக இருந்தாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் அனல் பறக்கும். ஆனால் இந்த இரு நாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைத்த பெருமை ரோஹன் போபண்ணா - ஐசாம் அல் குரேஷிக்கு உண்டு. ‘இந்தோ பாக் எக்ஸ்பிரஸ்’ என செல்லமாக அழைக்கப்படும் இந்தியாவின் போபண்ணா - பாகிஸ்தானின் குரேஷி ஜோடி டென்னிஸ் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவயதில் ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் ஆடும் காலத்திலேயே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து 2003-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த டென்னிஸ் போட்டியொன்றில் இருவரும் இணைந்து ஆடியுள்ளனர். இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். இதன்பிறகு சில காலம் இணைந்து ஆடாத இந்த ஜோடி, 2007-ம் ஆண்டுமுதல் மீண்டும் சேர்ந்து ஆடத் தொடங்கியது.

ஆவேசமாக சர்வீஸ் செய்வதில் குரேஷி கெட்டிக்காரர். அற்புதமாக பிளேசிங் செய்து எதிராளியை நிலைகுலையச் செய்வதில் போபண்ணா வல்லவர். இப்படி ஒவ்வொரு விதத்தில் இருவரும் சிறந்தவர்களாய் இருக்க, டென்னிஸ் உலகில் வெற்றிகள் தேடிவந்தன.

2010-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றை எட்டிய இந்த ஜோடி, அதே ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகளில் பட்டம் வென்றது. இடையில் 2014-ம் ஆண்டில் பிரிந்த இந்த ஜோடி, இப்போது மீண்டும் இணைந்து ஆட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குரேஷி, “ஜெயிக்கிறோமோ இல்லையோ, நாங்கள் ஜோடி சேர்ந்து ஆடும்போது, இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள், தங்கள் பகையை மறந்து ஒன்றாகச் சேர்ந்து எங்களுக்காக கைதட்டுவார்கள். இதை பெருமையாகக் கருதுகிறோம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x