

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடியதைப் பார்க்கும்போது வீரேந்திர சேவாக் இடது கையில் ஆடுவதைப் போலத் தோன்றியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் வென்றது. இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்தின் ஆக்ரோஷமான ஆட்டம் இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பாகவே ஆடி வருகிறார். இதனால் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் ரிஷப் பந்த்தைப் பாராட்டி தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். "ரிஷப் பந்த் அட்டகாசமாக ஆடுகிறார். ஆட்டத்தில் இருக்கும் அழுத்தம் சுத்தமாக பாதிக்காத ஒரு வீரரை நீண்ட நாட்கள் கழித்து நான் பார்க்கிறேன். 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் கூட அவர் ஆடியது போல யாராலும் முடியாது.
களம் எப்படி இருந்தாலும், எதிரணி எவ்வளவு ரன்கள் சேர்த்திருந்தாலும் அவர் தனது ஆட்டத்தை ஆடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரையும் சிறப்பாக எதிர்கொள்கிறார். அவர் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தேன். சேவாக் இடது கையில் ஆடுவதைப் போல இருந்தது.
நான் சேவாக்குடன் ஆடியிருக்கிறேன். அவர் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். களம் எப்படி, எதிரணிப் பந்துவீச்சு எப்படி என்று எதையும் பார்க்காமல் அடிப்பார்.
பவுண்டரியில் ஃபீல்டர்கள் இருந்தாலும் அடிப்பார். அவருக்குப் பிறகு, எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு வீரரை இப்போது பார்க்கிறேன்" என்று இன்ஸமாம் கூறியுள்ளார்.