Published : 10 Jun 2014 02:54 PM
Last Updated : 10 Jun 2014 02:54 PM

ஐசிசி-யை பிசிசிஐ மிரட்டியதாகக் கூறியது பெரிய நகைச்சுவை என்கிறார் முன்னாள் ஐசிசி தலைவர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் சஞ்சய் படேல் ஐசிசியை தங்கள் வழிக்குக் கொண்டுவர இன்னொரு ஐசிசி-யை அமைப்போம் என்று மிரட்டியதாகக் கூறியிருப்பது பெரிய நகைச்சுவை என்று முன்னால் ஐசிசி தலைவர் ஈஷான் மானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் கூறுகையில்,

“நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறேன். நான் ஐசிசி தலைவராக இருந்தபோது ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசி நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டோம் என்று அச்சுறுத்தியது. நான் அப்போது ஐசிசி-யின் மற்ற வாரிய உறுப்பினர்களை ஒன்று சேர்த்தேன், இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் நாட்டு வாரியங்களும் உண்டு. இவர்களிடம் நிலைமை பற்றி பேசினேன், அதன் பிறகு இவர்களே அந்த குறிப்பிட்ட கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி-யின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க முடியும் என்றும் உங்கள் இஷ்டத்திற்கு முறித்துக் கொள்ள முடியாது என்றும் அறிவுறுத்தினர்.

மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு திட்டவட்டமாகக் கூறியவுடன் ‘அந்தக் குறிப்பிட்ட நாட்டு கிரிக்கெட் வாரியம்’தன் நிலையை உணர்ந்து கொண்டது” என்றார்.

மேலும், இப்போது தான் ஐசிசி தலைவராக இருந்திருந்தால், பிசிசிஐ மிரட்ட்லை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று கூறினார் அவர். முதலில் அதன் நிலைப்பாடு என்ன என்பதை எழுத்தில் கேட்டிருப்பார் என்றும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உறுதியாக இருக்கச் செய்து பிசிசிஐ-யின் மிரட்டலை ஒன்றுமில்லாதது என்று அவர் உலகிற்கு எடுத்துக் காட்டியிருப்பார் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிரட்டியதை உண்மையென நினைத்து பதட்டம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் நன்மையையே பெரிதாகக் கருதியிருக்க வேண்டும். மாறாக அவர்களும் சேர்ந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மோசமான ஒன்றைச் செய்துள்ளனர்.

இந்திய மக்கள் பிசிசிஐ-யின் இந்தச் செயல்பாட்டை ஏற்கப்போவதில்லை. கிரிக்கெட் உலகிற்கு நிறைய வருவாயை இந்திய கிரிக்கெட் ஈட்டித் தருகிறது என்பது உண்மைதான், ஆனால் உலக கிரிக்கெட்டின் அந்த வருவாய்களுக்கு பிசிசிஐ தங்களை ஏதோ முதலாளிகள் போல் கருதுவதை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. இந்தியா நன்றாக விளையாட வேண்டும் என்றே அவர்கள் விரும்புவர்.

இந்திய கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் பெரிய வருவாயை ஈட்டித் தருகின்றனர். இதற்கும் பிசிசிஐ-க்கும் என்ன தொடர்பு? இந்திய கிரிக்கெட் பெரிய அளவுக்கு வருவாயைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அது பிசிசிஐ-யின் பணம் அல்ல.

70% வருவாய் இந்தியா மூலம் வருகிறது என்று கூறுகிறார் சஞ்சய் படேல் ஆனால் இந்தியா தொடர்ந்து ஜிம்பாவே, வங்கதேசம், நியூசீலாந்திலாந்து ஆகிய அணிகளுடன் ஆடினால் வருவாய் வந்து விடுமா? ஆகவே உயர்மட்ட அணிகளுக்கிடையே போட்டிகள் நடந்தால்தான் வருவாயும் குவியும். ஆகவே இந்திய கிரிக்கெட் அதிக வருவாயைக் கொண்டு வருகிறது என்றால் அது ஒருவழிப்பாதையல்ல அது இருவழிப்பாதை.

இவ்வாறு கடும் விமர்சனப்பார்வையை முன் வைத்துள்ளார் ஈஷான் மானி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x