6-வது 'டவுனில்' ரிஷப் பந்த் சதம் அடித்து பதிலடி கொடுத்ததுதான் நான் பார்த்ததிலே சிறந்தது: ரவி சாஸ்திரி புகழாரம்

சதம் அடித்த ரிஷப் பந்த்: படம் உதவி | ட்விட்டர்.
சதம் அடித்த ரிஷப் பந்த்: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 6-வது டவுனில் களமிறங்கி சதம் அடித்து எதிரணிக்கு பதிலடி கொடுத்ததில், நான் பார்த்தவரையில் ரிஷப் பந்த்தின் சதம்தான் சிறந்தது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இந்திய அணி முதல் இன்னங்ஸில் 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப்தான் அணியைச் சரிவிலிருந்து மீட்டது. சிட்னி டெஸ்ட், காபா டெஸ்ட், அகமதாபாத் டெஸ்ட் என இக்கட்டான நேரத்தில் எல்லாம் இந்திய அணிக்கு ஆபத்பாந்தவனாக மாறி ரிஷப் பந்த் காப்பாற்றி வருகிறார். 118 பந்துகளில் ரிஷப் பந்த் 101 ரன்கள் சேர்த்து உள்நாட்டில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

இந்திய அணியின் வெற்றிக்கு ரிஷப் பந்த்தின் அதிரடியான இன்னிங்ஸ் முக்கியக் காரணம் என்பதில் மறுப்பதற்கில்லை.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ரிஷப் பந்த்தின் கடினமான உழைப்புதான் பலனைக் கொடுத்துள்ளது. கடந்த 3 முதல் 4 மாதங்களாக நரகத்தில் உழைப்பது போன்று ரிஷப் பந்த் உழைத்தார். அதற்கான முடிவுகள், பலன்கள்தான் கிடைத்து வருகின்றன. ரிஷப் பந்த் நேற்று ஆடிய இன்னிங்ஸ் மிகச்சிறந்த பதிலடியாகப் பார்க்கிறேன்.


இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 6-வது வரிசையில் களமிறங்கி, அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில், எதிரணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சதம் அடித்ததில் சிறந்ததாக ரிஷப் பந்த்தின் ஆட்டத்தைத்தான் பார்க்கிறேன்.

எதுவுமே எளிமையாகக் கிடைத்துவிடாது, கடினமாக உழைக்க வேண்டும் என ரிஷப் பந்த்திடம் தெரிவித்தோம். பேட்டிங் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதற்காக ரிஷப் பந்த் உடல் எடையையும் சற்று குறைக்க கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். ரிஷப் பந்த்துக்குத் திறமை இருக்கிறது, சிறந்த மேட்ச் வின்னர். ரோஹித் சர்மாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது, சுந்தருடன் இணைந்து விளையாடியது என ரிஷப் பந்த் ஆட்டம் அருமை.

சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் ஐசிசி சில விதிமுறைகளை மாற்றியது. எங்கள் அணி வீரர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்த டெஸ்ட் தொடரை வென்று, டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனலுக்குத் தகுதி பெற்றுள்ளது திருப்தியாக இருக்கிறது. அதிலும் இளம் வீரர்கள் கடினமான காலகட்டத்தில் திறமையை நிரூபித்துள்ளனர் . ரிஷப் பந்த், வாஷிங்டன் இருவரும் அழுத்தத்தை, நெருக்கடியைச் சமாளித்து ஆடி 360 ரன்கள் சேர்த்தது என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை''.

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in