

2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் நடக்கும் ஐபிஎல் பொதுக்குழு கூட்டத்தில் இந்தத் தேதிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடத்தப்படும் என்பது குறித்து கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 14-வது ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி விரும்புகிறார், அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இதுவரை பயோ பபுள் சூழலில் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடர், முஸ்டாக் அலி டி20 தொடர் உள்ளிட்டவை வெற்றிகரமாக நடத்தப்பட்டதால், ஐபிஎல் போட்டித் தொடரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் பொதுக்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதிகள், எந்தெந்த நகரங்களில் போட்டியை நடத்தலாம் ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பொதுக்குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், "14-வது ஐபிஎல் டி20 போட்டி ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி மே 30-ம் தேதி நடக்கிறது. தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதபோல ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த நகரங்களில் நடத்தலாம் என்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
முதலில் ஒரு நகரத்தில் மட்டும் நடத்தலாம் என்று யோசித்தோம். தற்போது 4 முதல் 5 நகரங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து அடுத்த வாரம் நடக்கும் பொதுக்குழுவில்தான் முடிவு செய்யப்படும்.
பல இடங்களில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும்போது, வீரர்களை பயோ பபுள் சூழலில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து உள்ளிட்டவையும் பயோ பபுள் சூழலில் இருக்க வேண்டும் என்பதால், ஆழ்ந்த ஆலோசனை நடத்து வருகிறது. வீரர்களின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்
ஐபிஎல் டி20 போட்டிகளை மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் மட்டும் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக அகமதாபாத் நகரமும் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், இடங்கள் குறித்து இன்னும் ஏதும் முடிவாகவில்லை.