Last Updated : 06 Mar, 2021 01:05 PM

 

Published : 06 Mar 2021 01:05 PM
Last Updated : 06 Mar 2021 01:05 PM

'வீரு' ஃபார்ம் குறையவேயில்லை; 35 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய சேவாக்; வங்க தேசத்தைப் புரட்டியெடுத்த இந்திய லெஜண்ட்

வீரேந்திர சேவாக்கை இப்போது கூட இந்திய அணிக்குத் தேர்வு செய்யலாம். அந்த அளவுக்கு அருமையான ஃபார்மில் இருக்கிறார். ராய்ப்பூரில் நேற்று நடந்த ரோட் சேப்டி வேர்ல்ட் சீரிஸ் டி20 போட்டியில் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேச அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 110 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய லெஜண்ட் அணி, 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நீண்ட காலத்துக்குப் பின் சச்சின், சேவாக் ஒன்றாகக் களமிறங்கியதைப் பார்க்கவும், அதிலும் சேவாக்கின் ருத்ர தாண்டவ ஆட்டத்தைக் காணவும் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

மீண்டும் களமிறங்கிய சச்சின், சேவாக்

அதிரடியாக ஆடிய சேவாக் 35 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கம் முதலே வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த சேவாக், 20 பந்துகளில் அரை சதத்தை எட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார். டி20 போட்டின்னா இப்படித்தான் விளையாடணும் என சேவாக் பாடமே எடுத்துவிட்டார். ஆட்ட நாயகன் விருதும் சேவாக்கிற்கே வழங்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர் 26 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து (5 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேசத்தைச் சமாளிக்க இந்திய லெஜண்ட் அணியின் 11 வீரர்களும் பேட்டிங் செய்யத் தேவையில்லை. நாங்கள் இருவர் போதும் என்ற ரீதியில் சச்சின், சேவாக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு அணியை வெற்றி பெற வைத்தது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சேவாக்கின் பேட்டிலிருந்து ஒவ்வொரு ஷாட்டும் பவுண்டரி, சிக்ஸருக்குப் பறந்தது. முகம்மது ரபீக் வீசிய முதல் ஓவரிலேயே சேவாக் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என 19 ரன்களை விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

பொழுதுபோக்குக்கான போட்டிதான் என்று கூட ஜாலியாக விளையாடாமல், வங்கதேசப் பந்துவீச்சை சேவாக் வெளுத்து வாங்கிவிட்டார். சச்சினும் தனது பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.

அதிரடியாக ஆடிய சேவாக் 20 பந்துகளில் மிகப்பெரிய சிக்ஸர் அடித்து அரை சதத்தை நிறைவு செய்தார். 35 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்த சேவாக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருவேளை வங்கதேசம் கூடுதலாக 50 ரன்கள் சேர்த்திருந்தால் சேவாக் களத்தில் மதம்பிடித்த யானைபோன்று ஆடிய வேகத்தில் சதமே அடித்திருப்பார். நல்லவேளையாக வங்கதேச அணியினர் 109 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டனர்.

வங்கதேச பந்துவீச்சாளர்கள் முகமது ஷெரீப், ஆலம்கீர் கபீர், காலித் மசூத் ஆகியோர் சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்தனர்.

முன்னதாக, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசத் தரப்பில் தொடக்க வீரர் நிஜாமுதீன் 49 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

இந்திய அணித் தரப்பில் வினய் குமார் 2 விக்கெட்டுகளையும், பிரக்யான் ஓஜா, யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x