

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 559 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 253, ஹவாஜா 121 ரன் விளாசினர். தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 153.5 ஓவரில் 624 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 166, ராஸ் டெய்லர் 290 ரன் கள் விளாசினர். ஆஸி.தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தி னார்.
65 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 131, வோஜஸ் 101 ரன்னுடன் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினர். ஸ்மித் 138, வோஜஸ் 119 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த மார்ஷ் 1, ஜான்சன் 29, நெவில் 35 ரன்களில் வெளியேறினர். 103 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அப்போது ஸ்டார்க் 28, ஹசல்வுட் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நியூஸி. தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 321 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு நியூஸிலாந்து அணி பேட் செய்தது. இந்த போட்டியுடன் ஓய்வு பெற்ற ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், லதாமை 15 ரன்னிலும், குப்திலை 17 ரன்னிலும் வெளியேற்றினார். நியூஸிலாந்து அணி 28 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. வில்லியம்சன் 32, ராஸ் டெய்லர் 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக ராஸ் டெய்லர் தேர்வானார். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் வரும் 27ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.