Last Updated : 05 Mar, 2021 07:08 PM

 

Published : 05 Mar 2021 07:08 PM
Last Updated : 05 Mar 2021 07:08 PM

'ஆபத்பாந்தவன்' பந்த்; சேவாக் பாணியில் மிரட்டல் சதம்: சுந்தர் அற்புதம் ; இந்திய அணி 89 ரன்கள் முன்னிலை

அதிரடியாக ஆடி சதம் அடித்த ரிஷப் பந்த் : படம் உதவி ட்விட்டர்

அகமதாபாத்


சேவாக் பாணியில் அதிரடியாக ஆடி ரிஷப் பந்த் அடித்த சதம், வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் ஆகியவற்றால், அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால், ரிஷப்பந்த், சுந்தர் கூட்டணி நங்கூரமிட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

இப்போது ஆட்டம் இங்கிலாந்தின் கையைவிட்டுச் சென்றுவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதிரடியாக ஆடிய ரிஷப்பந்த் 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். அரைசதம் அடிக்க 82 பந்துகளை எடுத்துக்கொண்ட ரிஷப்பந்த், அதன்பின் சேவாக் பாணியில் அதிரடியாக ஆட, 33 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி சதத்தை அடைந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். உள்நாட்டில் ரிஷப்பந்த் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

அதிலும் 96 ரன்களை ரிஷப் பந்த் எட்டியிருந்த போது, இங்கிலாந்து கேப்டன் ரூட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தது அழகு. சேவாக்கின் மிரட்டல் சாத்து பாணியை கண்முன் கொண்டு வந்தது.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் தயங்கித் தயங்கி விளையாடிய முன்னணி பேட்ஸ்மேன்கள், கோலி, ரஹானே, புஜாரா வீணாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆனால், அப்படிஎல்லாம் விளையாடினால் சரிப்பட்டு வராது என்று கூறி, இளம்கன்று பயமறியாது என்பதைப் போல், சேவாக்கின் பாணியை ரிஷப்பந்த் கையிலெடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் யுத்தியை சிதைக்கும் வகையில் விளாசலில் ரிஷப்பந்த் ஈடுபட, கேப்டன் ரூட் பீல்டிங் செட் அப்பையே மாற்ற வேண்டிய சூழல் வந்தது.

ஜாம்பவான் சேவாக் தான் விளையாடிய காலத்தில், ஒருநாள் போட்டியையும், டெஸ்ட் போட்டியையும் ஒரே மாதிரித்தான் அணுகுவார். இருவகையிலான போட்டியிலும் சேவாக் வந்துவிட்டால் பந்து பறக்கும்.

சேவாக் களத்தில் நங்கூரமிட்டால் மதம்பிடித்த யானைதான், பந்துவீச எதிரணி வீரர்கள் அச்சப்படுவார்கள், எதிரணியின் திட்டத்தையே சிதைத்துவிடுவார். அதுபோன்ற ஆட்டத்தை ரிஷப்பந்த் இன்று கையாண்டு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தினார் என்பதில் மாற்றமில்லை

ரிஷப் பந்துக்கு துணையாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடன் களத்தில் உள்ளார். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் சேர்ந்து 26 ஓவர்களில் 113 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்து, 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுந்தர் 60 ரன்களுடனும், படேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் இரு செஷன்களும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில்தான் சென்றது. ஆனால், ஆட்டம் பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப்பின் ரிஷப்பந்த், சுந்தர் கையில் எடுத்துக்கொண்டர். இவர்களிடம் இருந்து ஆட்டத்தை மீட்க இங்கிலாந்து வீரர்கள் கடுமையாகப் போராடியும் முடியவில்லை.

ஒருகட்டத்தில் ஆட்டத்தை கையில் வைத்திருந்த இங்கிலாந்து அணியினர் ரிஷப்பந்திம் கொடுத்துவிட்டு முழுக்கிறார்கள். இப்போது ஆட்டம் இந்தியஅணியின் கைக்கு வந்துவிட்டது.

நாளை 3-ம் நாள்ஆட்டத்தில் இந்திய அணி குறைந்தபட்சம் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால்கூட, அந்த முன்னிலையைக் கடந்து, இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் ஆடுவது மிகக் கடினம். ஏனென்றால், ஆடுகளம் கடைசி 3 நாட்கள் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் என்பதால் அஸ்வி்ன், அக்ஸர் படேல், சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது மிகக்கடினமாக இருக்கும்.

முதல் இன்னிங்ஸை நேற்று ஆடிய இந்திய அணி நேற்றையஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது. ரோஹித் சர்மா 8 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இருவரும் 2-ம்நாள் ஆட்டத்தை இன்று தொடங்கினர். ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில், புஜாரா 17 ரன்னில் லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.


முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி(0), புஜாரா(1), ரஹானே(27) ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் ரோஹித் சர்மா மட்டும் போராடி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 13 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ரிஷப்பந்த், சுந்தர் கூட்டணி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி, காபாவில் நடந்தஆட்டத்தில் ரிஷப்பந்த் எந்தவகையான ஆட்டத்தைவெளிப்படுத்தினாரோ அதேபோன்ற ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தி சதம் அடித்து 101 ரன்னில்ஆட்டமிழந்தார். 96 பந்துகளில் சுந்தர் அரைசதம் அடித்தார். களத்தில் சுந்தர் 60 ரன்களுடனும், படேல் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்ஸன் 3 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ், லீச் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x