Last Updated : 04 Mar, 2021 11:59 AM

 

Published : 04 Mar 2021 11:59 AM
Last Updated : 04 Mar 2021 11:59 AM

அக்ஸர் அசத்தல்: நேராக வந்த பந்தில் போல்டான சிப்லி; இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறல்

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அக்ஸர் படேல் : படம் உதவி ட்விட்டர்

அகமதாபாத்


அக்ஸர் படேலின் அசத்தலான சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 4-வதுடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உணவுஇடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களுடனும், பேர்ஸ்டோ 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடந்த 3 டெஸ்ட் போட்டியிலும் இதேபோன்று முதல்நாள் உணவு இடைவேளியின்போது 3 விக்கெட் இழப்புக்கு 74ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி. அதன்பின் உணவு இடைவேளைக்குப்பின் மடமடவென விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அதேபோன்ற நிலைமை இந்த டெஸ்ட் போட்டியில் ஏற்பட்டுவிடக்கூடாது.

ஆடுகளத்தைப் பொருத்தவரை கடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்ததைவிட பந்து அதிகமாகச் சுழலவில்லை. இயல்பான ஆடுகளத்தைப் போலவே இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தங்களின் பேட்டிங்இயலாமையால்தான் விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் தொடக்க ஆட்டக்கார்ர சிப்லி நேராக வந்த பந்தை ஆடத்தெரியாமல் அக்ஸர் படேல் பந்துவீச்சில் போல்டாகியதற்கெல்லாம் ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது. ஆடுகளத்தில் எந்தவிதமான தரக்குறைவும் இல்லை. ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில்தான் சிக்கல் இருக்கிறது

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் மிக முக்கியமானது. இந்த டெஸ்ட் போட்டியில் வென்றாலும், அல்லது டிரா செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிடும். ஆனால், தோற்றால், பைனலுக்கு ஆஸ்திரேலியா முன்னேறிவிடும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், பிராட்டுக்குப் பதிலாக, பெஸ், லாரன்ஸ் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கிராலி, சிப்லி ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்திலேயே அக்ஸர் படேல் பந்துவீச அழைக்கப்பட்டார். அக்ஸர் வீசிய 6-வது ஓவரில், நேராக வந்த பந்த ஆடத்தெரியாமல் ஆடி, சிப்லி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்தமுறை பல இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இதேபோன்று ஸ்டெம்புக்கு நேராக வந்த பந்தை ஆடத்தெரியாமல், பந்து டர்ன் ஆகும் நினைத்து பேட் செய்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அனுபவத்திலிருந்து யாரும் இன்னும் பாடம் கற்கவில்லை.

அடுத்து, பேர்ஸ்டோ களமிறங்கி, கிராலியுடன் சேர்ந்தார். அக்ஸர் வீசிய 8-வது ஓவரில் மிட்ஆப் திசையில் கிராலி அடிக்க அது முகமது சிராஜிடம் பந்து தஞ்சமடைந்தது. 9 ரன்னில் கிராலி ஆட்டமிழந்தார். 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரூட் களமிறங்கி, பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். சிராஜ் வீசிய 13-வது ஓவரி்ல கால்காப்பில் வாங்கி ரூட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவுடன் இணைந்து விளையாடி வருகிறார். இருவரும் இந்தியப் பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டு பேட் செய்து வருகின்றனர். அதிலும் பேர்ஸ்டோ அவ்வப்போது வேகப்பந்துவீச்சில் மோசமான பந்துகளைத் தேர்வு செய்து பவுண்டரிகளை அடித்தார்.

அஸ்வின் 3 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளதால், உணவு இடைவேளைக்கு முன்பாக பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. பிற்பகலில் அஸ்வின் விஸ்வரூமெடுத்தால், இங்கிலாந்து பெரும் சரிவைச் சந்திக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x