Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் - நெருக்கடியுடன் களமிறங்குகிறது இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று காலை தொடங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 எனமுன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இதே மைதானத்தில் நடைபெற்ற3-வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில்முடிவடைந்திருந்தது. பகலிரவாக நடத்தப்பட்ட அந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்விஅடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இங்கிலாந்து அணி இழந்தது.

வெறும் 842 பந்துகள் மட்டுமேவீசப்பட்டதால் நரேந்திர மோடி ஆடுகளத்தின் தன்மை விவாதப்பொருளாக மாறியது. தற்போது மீண்டும் அதே மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது, அதுவும் வழக்கம்போல் சிவப்பு பந்தில்.இம்முறையும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நெருக்கடியுடனே களமிறங்குகிறது. ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டும்.

இதனால் வெற்றி அல்லது டிராவை குறிவைத்தே இந்திய அணி செயல்படக்கூடும். இதில் ஏதாவதுஒன்று நிகழ்ந்தாலும் இந்திய அணிடெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். மாறாக இந்திய அணி தோல்வியை சந்தித்தால் இங்கிலாந்து அணியின் பரம வைரியான ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும்.

இரு அணியிலும் சிறிய அளவில்மாற்றங்கள் இருக்கக் கூடும். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகி உள்ளதால் உமேஷ் யாதவ் இடம்பெறக்கூடும். இங்கிலாந்து அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராகடாஸ் பெஸுடன் களமிறங்கக் கூடும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி71 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 69.2சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 64.1 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

நேரம் : காலை 9.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x