பாஜகவில் இணைகிறாரா பிசிசிஐ தலைவர் கங்குலி? -மே.வங்க பாஜக தலைவர் விளக்கம்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : கோப்புப்படம்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : கோப்புப்படம்
Updated on
2 min read

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கு மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பதில் அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின், மாநில கிரிக்கெட் சங்கத்தலைவராகவும், பின்னர் தற்போது பிசிசிஐ தலைவராகவும் கங்குலி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில்தான் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராகினார். கங்குலிக்கு எப்போதுமே தார்மீர ரீதியாக மம்தா பானர்ஜி ஆதரவு அளித்து வருகிறார், சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோதுகூட மம்தா பானர்ஜி நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று கங்குலியின் உடல்நலன் விசாரித்தார்.

கிரிக்கெட் சார்ந்த பதவிகளில் கங்குலி வகித்து, அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் காட்டினாலும் இதுவரை எந்தக் கட்சியிலும் அவர் சேரவில்லை. ஆனால், பிசிசிஐ செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வந்தபின், பாஜகவுடன் இணைத்து கங்குலி பேசப்பட்டார்.

பாஜகவில் இணைய வற்புறுத்தப்படுகிறார் கங்குலி என்று பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்தியையும் மறுத்த கங்குலி, எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் என கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்தார்.

இந்நிலையில், வரும் 7-ம் தேதி பிரதமர் மோடி கொல்கத்தாவுக்கு வந்து பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த பேரணியில் சவுரவ் கங்குலி பங்கேற்க உள்ளதாகவும், அப்போது பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

வரும் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பாஜக தலைவர் திலிப் கோஷ்
பாஜக தலைவர் திலிப் கோஷ்

இந்த பேரணியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்பாரா அல்லது பங்கேற்க மாட்டாரா என்பது அவரைப் பொருத்தது. அவர் விரும்பினால் பங்கேற்கலாம் வந்தால் வரவேற்போம். கங்குலி உடல் நிலை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதால் அவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கலாம்.

ஆனால், சவுரவ் கங்குலி பாஜகவில் சேரப்போவதாகக் கூறும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அவர் பாஜகவில் இணையவில்லை, அது குறித்து எங்களிடம் ஏதும் பேசவில்லை.

மேற்கு வங்க தேர்தலில் முதல் இரு கட்டத் தேர்தலுக்கான பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதற்கான ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளன" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in