

அகமதாபாத்தில் வரும் 4-ம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மீண்டும் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த 3-வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி ஆட்டம் தொடங்கிய 2 நாட்களிலேயே 10 விக்கெட்டில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.
ஆனால், அகமதாபாத் ஆடுகளம் தரமற்றது, இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பீட்டர்ஸன், மைக்கேல் வான், குக், கேப்டன் ரூட் ஆகியோர் விமர்சித்தனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பலரும் ஆடுகளத்தை விமர்சித்தனர். டெஸ்ட் போட்டி நடத்தத் தகுதியான ஆடுகளம் இல்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேசமயம், கவாஸ்கர், விவியன் ரிச்சார்ட்ஸ், இயான் சேப்பல் போன்ற ஜாம்பவான்கள் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய சுழற்பந்து வீச்சைச் சமாளித்து விளையாடத் தெரியவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இந்திய அணி வீரர் ரோஹத் சர்மா அளித்த பேட்டியில் " ஆடுகளத்தில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. பேட்ஸ்மேன்களின் தவறு " எனத் தெரிவித்தார்.
கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் " இரு அணிகளின் பேட்ஸ்மேன்களின் ஒட்டுமொத்த தோல்விதான். ஆடுகளத்தில் எந்தக் கோளாறும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 4-ம் தேதி நடக்க உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டிக்கு இருந்ததுபோல் இல்லாமல் இந்த முறை இரு அணிகளும் நன்கு ஸ்கோர் செய்யும் விதத்தில் ஆடுகளம் இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஆடுகளம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. இந்தச் சூழலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ட்விட்டரில் நேற்று கிண்டலாக ஒரு படத்தைப் பதிவிட்டு ஆடுகளத்தை விமர்சித்திருந்தார்.அதில், " விவசாயி ஒருவர், மாடுகளை ஏர்பூட்டி, வயலில் உழும் படத்தை" பதிவிட்டு 4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் அமைக்கும் பணி தீவரமாக நடக்கிறதா எனக் கேட்டிருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இன்று மற்றொரு படத்தைப் பதிவிட்டு மைக்கேல் வான் கிண்டலடித்துள்ளார். அதில், " வயலில் உழுதுபோட்ட மேடு, பள்ளமாக இருக்கும் பகுதியில் மைக்கேல் வான் பேட்டிங் செய்வதுபோல் படத்தைப் பதிவிட்டுள்ளார்"
அதுமட்டுமல்லாமல், 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தவுடன் மைக்கேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில் " உண்மையாக, நேர்மையாகச் செல்லுங்கள், இந்த ஆடுகளம் 5 நாட்கள் நடக்கும் போட்டிக்காக அமைக்கப்பட்டதா" எனக் கேட்டிருந்தார். அன்று முதல் தொடர்ந்து ஆடுகளத்தை மைக்கேல் வான் கிண்டல் செய்து வருகிறார்.