

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று அகமதாபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்திய அணி தற்போது அகமதாபாத் நகரில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று 4-வது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. வரும் 4-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று முதல் மத்திய அரசு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி முதல் நபராக நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று காலை அகமதாபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்த ரூ.250 கட்டணமாக மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. அதன்படி ரவி சாஸ்திரி இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் " கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். கரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவை வலிமையானதாக மாற்றும் மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்களுக்கு நன்றி. அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர் காந்தாபென் அவரின் குழுக்களும் சிறப்பான பணியைச் செய்து வருகிறார்கள், அவர்களின் சேவை என்னை ஈர்த்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட மற்ற ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.