அஸ்வின் சுழலில் 184 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

அஸ்வின் சுழலில் 184 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 17 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை துவங்கவுள்ளது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா, இன்றைய நாளின் துவக்கத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆம்லா, எல்கர் இருவரும் சீரான வேகத்தில் ரன் சேர்த்து வந்தனர். ஸ்கோர் 85 ரன்களாக இருந்தபோது அஸ்வினின் சுழலில் 37 ரன்களுக்கு எல்கர் வீழ்ந்தார்.

தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அவர் 7 ரன்கள் எடுத்திருந்த போது, ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தாலும் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஓவரிலேயே ஆம்லா, விலாஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் அதிரடியாக வீழ்த்தினார்.

உணவு இடைவேளையின் போது 127 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என ஸ்கோர் இருந்தது. தொடர்ந்து ஒரு முனையில் டி வில்லியர்ஸ் நிலைத்து ஆட முயற்சித்தாலும், மறுமுனையில் இந்திய சுழற் பந்து வீச்சாளர்கள் தொடர் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர். ஃபிலாண்டர் 3 ரன்களுக்கும், ஹார்மர் 7 ரன்களுக்கும், ஸ்டெய்ன் 6 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர்.

அரை சதம் கடந்த டி வில்லியர்ஸும் 63 ரன்களுக்கு மிஸ்ராவின் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து தாஹிர் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா 184 ரன்களுக்கு ஆட்டமிழந்துது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 201 ரன்களை விட 17 ரன்கள் குறைவாகும்.

இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அனைத்து விக்கெட்டுகளையும் சுழற் பந்து வீச்சாளர்களே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிறிது நேரத்தில் இந்தியா தனது 2-வது இன்னிங்ஸை துவங்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in