4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் தயாராகிறதா? விவசாயி வயலில் உழும் படத்தைப் பதிவிட்டுக் கிண்டல் செய்த மைக்கேல் வான்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் : கோப்புப்படம்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் : கோப்புப்படம்
Updated on
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் தயாராகிறதா என விவசாயி வயலில் உழும் புகைப்படத்தைப் பதிவிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. சென்னையில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

அகமதாபாத்தில் நடந்த 3-வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டி தொடங்கிய 2 நாட்களிலேயே ஆட்டம் முடிந்தது. இந்திய அணி வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.

ஆனால், அகமதாபாத் ஆடுகளம் தரமற்றது, இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பீட்டர்ஸன், மைக்கேல் வான், குக், கேப்டன் ரூட் ஆகியோர் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பலரும் ஆடுகளத்தை விமர்சித்தனர். டெஸ்ட் போட்டி நடத்தத் தகுதியான ஆடுகளம் இல்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் தயாராகிறதா?
4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் தயாராகிறதா?

அதேசமயம், கவாஸ்கர், விவியன் ரிச்சார்ட்ஸ், இயான் சேப்பல் போன்ற ஜாம்பவான்கள் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய சுழற்பந்துவீச்சைச் சமாளித்து விளையாடத் தெரியவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 4-ம் தேதி நடக்க உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டிக்கு இருந்ததுபோல் இல்லாமல் இந்த முறை இரு அணிகளும் நன்கு ஸ்கோர் செய்யும் விதத்தில் ஆடுகளம் இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆடுகளம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

இந்தச் சூழலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ட்விட்டரில் வயலில் இரு மாடுகளை ஏர்பூட்டி, உழவர் ஒருவர் உழும் படத்தைப் பதிவிட்டு அகமதாபாத் ஆடுகளத்தைக் கிண்டல் செய்துள்ளார்.

அதில், "4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளத்தைத் தயார் செய்யும் பணிகள் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். சிறப்பாக நடக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்குத் தொடக்கத்தில் ஏற்றதாகவும், கடைசி நாளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் மாறும் என்று ஆடுகள வடிவமைப்பாளர் எதிர்பார்க்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in