Published : 27 Jun 2014 11:42 AM
Last Updated : 27 Jun 2014 11:42 AM

முல்லரின் அபார கோலில் ஜெர்மனி வெற்றி; தோல்வியுற்ற அமெரிக்காவும் முன்னேறியது

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், அமெரிக்காவை ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனாலும், இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

இதே ஜி-பிரிவைச் சேர்ந்த மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி, அமெரிக்க அணியுடன் 4 புள்ளிகள் எடுத்து சம நிலை பெற்றிருந்தாலும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் போர்ச்சுக்கல் அணி தகுதி பெற முடியாமல் போனது. அமெரிக்க அணி தகுதி பெற்றது.

ஜெர்மனி - அமெரிக்க அணிகள் முன்னேற டிரா செய்தாலே போதுமானது. ஆனால் டிராவுக்காக ஆட இரு அணிகளும் முயற்சி செய்யவில்லை. இதற்குக் காரணம் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.

மௌன ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆடினாலும், வெற்றி பெறுவதற்கான ரகசிய இச்சையை இரு அணிகளும் பூர்த்தி செய்யவே நினைக்கும். அல்லது இன்னொரு அணி மௌன ஒப்பந்ததின்படி டிராவுக்கு ஆடாமல் வெற்றி பெற ஆடினால் ஏமாற வேண்டி வரும். எனவே இரு அணிகளும் வெற்றிக்கு ஆடுவதுதானே முறை.

ஆனாலும் யு.எஸ் பயிற்சியாளர் கிளின்ஸ்மான் ஜெர்மனியைச் சேர்ந்தவர்தான். மேலும் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லூவுடன் இவருக்கு இருக்கும் நட்புறவு ஆட்டத்தை பேசி வைத்துக் கொண்டு டிரா செய்து விடுவார்கள் என்ற பேச்சுக்கே இடம் வகுத்தது.

தாமஸ் முல்லர் போன்ற ஒரு ஸ்ட்ரைக்கரை வைத்துக் கொண்டு கோல் அடிக்காதே என்று கூற முடியுமா? அல்லது அவரைத்தான் தடுக்க முடியுமா? அவர்தான் நேற்று அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றி கோலை அடித்தார். இந்த கோலுடன் இவரும் நெய்மார், மெஸ்ஸியுடன் தங்க பூட் போட்டியில் குதித்துள்ளார்.

ஜெர்மனியே முழு ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்கா முழுத் தடுப்பாட்டத்தில் இறங்கியது. மேலும் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் கோல் விழாமல் பார்த்துக் கொண்டார்.

ஆனால், எவ்வளவு நேரம்தான் முல்லரை அடக்கி வைக்க முடியும். ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜெர்மனிக்க்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. துல்லியமாக அடிக்கப்பட்ட கார்னர் ஷாட்டை மெர்டிசாக்கர் தலையால் முட்ட அமெரிக்க கோல் கீப்பர் ஹோவர்ட் அதனைத் தடுத்தார். ஆனால் பந்து ரீபவுண்ட் ஆக தாமஸ் முல்லர் அங்கிருந்து சரியாக அதனை கோலுக்குள் செலுத்தினார். ஜெர்மனி 1-0 முன்னிலை வகித்தது.

இதே நேரத்தில் கானா-போர்ச்சுக்கல் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் எய்தியது. முதல் கோலை கானாவின் ஜான் போயே என்ற வீரர் தெரியாமல் போர்ச்சுக்கலுக்குப் போட்டுக் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு இங்கு முல்லர் கோல் அடிக்க அங்கு கானா ஒரு கோல் அடித்து சமன் செய்தது.

இதுவும் யு.எஸ். ஆட்டத்தில் உத்வேகம் சேர்க்கவில்லை. ஆனால் இடைவேளைக்கு முன்னால் ஜெர்மனி தெளிவாக கோல்களை அடித்திருக்க வேண்டும் ஆனால் அமெரிக்க கோல் கீப்பர் ஹோவர்ட் ஒவ்வொரு முறையும் சரியாகக் கணித்துக் காப்பாற்றினார்.

அமெரிக்காவுக்கும் வாய்ப்பு வராமல் இல்லை. அமெரிக்க வீரர் மைக்கேல் பிராட்லி அற்புதமான பாஸ் ஒன்றை கிரகாம் சூசிக்கு அடிக்க அவர் இடதுபுறத்திலிருந்து பந்தை ஜெர்மன் கோல் நோக்கி தூக்கி அடிக்க மேல் போஸ்டில் பட்டு பந்து வெளியேறியது.

உலகச் சாதனை நாயகன் மிராஸ்லாவ் க்லோஸை ஜெர்மன் களமிறக்க அப்போதுதான் புரிந்தது ஜெர்மனி வெற்றிக்கு ஆடுகிறது டிராவுக்கு ஆடவிலை என்பது. க்லோஸ் ஏறக்குற்ரைய ஒரு கோல் அடித்து பிரேசில் ரொனால்டோவின் சாதனையைக் கடந்திருப்பார். ஆனால் அவரது அந்த முயற்சி பலனளிக்கைல்லை.

ஆட்டம் முடியும் தறுவாயில் அமெரிக்க வீரர் பெடோயா அபாரமாக பந்தை வலது புறத்தில் எடுத்துச் சென்றார் நிச்சயம் இது கோலில் முடியும் என்று எதிர்பார்த்த தருணத்தில் ஜெர்மனியின் பிலிப் லாம் சறுக்கிக் கொண்டு வந்து அவரைத் தடுத்தார்.பந்து வெளியே செல்ல யு.எஸ். அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. சமன் செய்ய ஒரு கடைசி வாய்ப்பு. ஆனால் பிராட்லி அடித்த கிராஸை டெம்ப்ஸே கோலாக மாற்றும் முயற்சி தோல்வியடைந்தது. ஜெர்மனி 1- 0 என்று வெற்றி பெற்றது.

நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி அணி அல்ஜீரியாவையும், அமெரிக்க அணி பெல்ஜியத்தையும் சந்திக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x